சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு.. ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்ந்து அட்டூழியம்.. பரபரக்கும் ஆந்திரா
அமராவதி: ஆந்திராவில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து இன்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இங்கு லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 13ம் தேதி ஆந்திராவில் லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஆந்திராவில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று விஜயவாடாவின் கஜுகாவா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் மீட்டிங் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்து சிலர் அவரை நோக்கி திடீரென்று கற்களை வீசினர். அதிர்ஷ்டவசமாக கற்கள் அவர் மீது படவில்லை. இதனால் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் கற்கள் வீசியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அதற்குள் ஓடி தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் சந்திரபாபு நாயுடுவின் மீட்டிங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இந்த சம்பவத்தால் சந்திரபாபு நாயுடு கடும் கோபம் அடைந்துள்ளார். மேலும் அவர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுபற்றி சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‛‛என் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை ஓடவிடமாட்டார்கள். இப்போது கஞ்சா, பிளேடு கும்பல்களும் இங்கு வந்துள்ளன. போலீசார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை " என்றார். நேற்றைய தினம் ஆந்திராவில் பேருந்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்தில் கல் தாக்கியதால் அவரது புருவத்தின் மேல்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கல்வீசியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்துக்கு நேற்று சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து இருந்தார். அதாவது, ‛‛ஜெகன்மோகன் ரெட்டியின் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். இதுபற்றி தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும்'' என்றார். இத்தகை சூழலில் தான் இன்று சந்திரபாபு நாயுடு மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications