வாஜ்பாய் வீட்டுக்குள் ஏறி குதித்து கடித்த பிரணாப் வளர்ப்பு நாய்.. இந்திரா காந்தியிடம் போன பஞ்சாயத்து
டெல்லி: அடல் பிகாரி வாஜ்பாயை பொருத்த அளவில் மிகவும் மனிதாபிமானம் மிக்கவர். அவர் கட்சி வேறுபாடுகளை என்றுமே பார்த்ததில்லை. தேசநலன் மற்றும் அனைவருக்குமான ஒரே மாதிரியான அன்புமே அவருக்கு பிரதானம்.
அவசர நிலையின் போது ஒன்றரை வருடங்கள் சிறையில் தள்ளினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஆனால் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரணமடைந்தபோது, அடுத்த பத்தாவது நிமிடம் இந்திராகாந்தியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் துக்கம் விசாரித்தார் வாஜ்பாய்.
அதேபோன்று சோனியா காந்தியுடன் கூட வாஜ்பாய்க்கு நல்ல உறவு இருந்தது. சோனியா காந்தி வீட்டில் ஒரு குடும்ப நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு தொடங்குவதாக இருந்தால், மாலை 4 மணிக்கே, வீட்டுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் வாஜ்பாய்.

சோனியா காந்தி ஆதங்கம்
இதனால்தான் வாஜ்பாயுடன் இருந்தது போல மோடி அரசுடன் காங்கிரஸ் தலைமை நெருக்கம், காட்டுவதில்லையே ஏன் என்று சோனியா காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, நேரு, இந்திரா காந்தி காலம் தொட்டே வாஜ்பாய் எங்கள் குடும்ப நண்பர் போல பழகி வந்தார். அதுபோன்ற ஒரு தனிப்பட்ட பழக்கம் இப்போது உள்ள பாஜக தலைமையிடம் எங்களுக்கு அமையாமல் போய்விட்டது, என்று ஆதங்கம் தெரிவித்தார் சோனியா காந்தி.

வாஜ்பாய்-இந்திரா நட்பு
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலத்தில் வாஜ்பாயை ஒன்றரை வருடங்கள் சிறையில் தள்ளினாலும் கூட வாஜ்பாய், அவர் மீது தனிப்பட்ட விரோதம் காட்டியதில்லை. இது புரிந்ததால்தான் இந்திரா காந்தியும், பிற்காலகட்டங்களில், வாஜ்பாயுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தார்.

இந்திரா காந்தி ஆதங்கம்
ஒரு முறை இப்படித்தான் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் வாஜ்பாயை இரு நாட்களாக காணவில்லை. சிறந்த பேச்சாளரான வாஜ்பாய் இல்லாத அவை வெறிச்சோடி கிடந்ததைபோல தோன்றியது இந்திராகாந்திக்கு. மூன்றாவது நாள் வாஜ்பாய் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது ஏன் உங்களை இரண்டு நாட்களாக காணவில்லை என்று அக்கறையாக கேட்டார் இந்திரா காந்தி.

வாஜ்பாய் பதில்
அதற்கு, வாஜ்பாயோ, உங்கள் அருகே உள்ள நிதி அமைச்சரிடம் அதைக் கேளுங்கள் என்றார். அப்போது நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார். அவரைப் பார்த்து என்ன ஆயிற்று என்று இந்திரா காந்தி கேட்க, அவர் சிரித்தார். வாஜ்பாயும் பதிலுக்கு சிரித்தார். "என்னதான் ஆனது? என்னிடம் சொல்லிவிட்டு தான் சிரியுங்களேன்.." என்று இந்திரா காந்தி கூற, பிரணாப் முகர்ஜி கூறினார் "எனது வீடும் வாஜ்பாய் வீடும் அருகருகே இருக்கிறது" என்று. அப்போது குறுக்கிட்ட இந்திரா காந்தி "ஆம், அதுதான் எனக்கு தெரியுமே" என்றார்.

நாய் பிரச்சினை
மேலும் தொடர்ந்த பிரணாப் முகர்ஜி, "எனது வீட்டில் வளர்க்கும் நாய் தடுப்பு சுவர் ஏறி குதித்து வாஜ்பாய் வீட்டுக்குள் சென்று அவரது நாயை கடித்து விட்டது. அவர் தனது நாயை அழைத்துக்கொண்டு இரு நாட்களாக கால்நடை மருத்துவரை பார்க்க சென்று விட்டு வந்தார். எனவேதான் நாடாளுமன்றம் வரவில்லை, என்றார் பிரணாப் முகர்ஜி. உடனே வாஜ்பாய் இந்திரா காந்தியைப் பார்த்து "உங்கள் அமைச்சர் எல்லை மீறுகிறார். கண்டித்து வையுங்கள்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும், பிரணாப்புடன் தினமும் காலையில் வாக்கிங் செல்வது, சேர்ந்து பேப்பர் படிப்பது, அரசியல் விவாதிப்பது என்று காலம் செலவிட்டவர்தான் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications