அமைதி திரும்பிய ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலால் 'ரத்தம் கொதிக்கிறது'.. பிரதமர் மோடி ஆவேசம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தேசத்தின் ரத்தமும் கொதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது: எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அனைவருக்குமே வலி
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள்.
ரத்தம் கொதிக்கிறதே..
இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்பிய தருணம்
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன.
காஷ்மீரை அழிக்க சதி
தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் காஷ்மீரை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.
ஒற்றுமை- ஒரே குரல்
இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் ஆதரவு
நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷம் தான் உலகம் நெடுகவும் இருக்கிறது. இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன. உலகத் தலைவர்கள் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்கள், கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். படுபயங்கரமாக புரியப்பட்ட இந்தக் கொடூரச் செயலை அனைவரும் கடுமையான சொற்களில் சாடியிருக்கிறார்கள். அவர்கள் இறந்தவரின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நீதி கிடைக்கும்.. கிடைத்தே தீரும்
உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி நாட்டு மக்களுடன் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன். இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications