மணிப்பூரில் பயங்கரம்:நாளை வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஜேடியூ வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு
இம்பால்: மணிபூர் சட்டசபை தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில தேர்தலில் போட்டியிடும் ஜேடியூ வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் சட்டசபையில் நாளை 38 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மணிப்பூர் தேர்தலில் பாஜகவை இடதுசாரி ஆயுதம் தாங்கிய குழுக்கள் எதிர்க்கின்றன.
அதேநேரத்தில் மற்றொரு ஆயுதம் தாங்கிய குழுவான குக்கி கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மணிப்பூர் தேர்தல் தற்போது பயங்கரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கிறது. பாஜகவுக்கு குக்கி இனத்தவர் வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே மணிப்பூரில் தேர்தலுக்கு முன்பாக வன்முறை சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. என்.பி.பி. கட்சியின் வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. நேற்று மாலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஜேடியூ வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாங்லிம்பாம் ரோஹித் சிங் என்ற ஜேடியூ வேட்பாளர் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நிகழ்ந்தது. கஷெட்ரியாகோ சட்டசபை தொகுதியில் ஜேடியூ வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். இச்சம்பவத்துக்கு ஜேடியூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
