திமுக தலைக்கு மேல் தொங்கிய கத்தி... வந்தது நிம்மதியளிக்கும் தீர்ப்பு!
திமுகவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அந்தக் கட்சிக்கு இருந்த அவப்பெயர் துடைத்தெறியப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி : திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் வழக்காக அவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருந்து கொண்டிருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தக் கட்சிக்கு இருந்த அவப்பெயரானது துடைக்கப்பட்டுள்ளது.
நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

அதிமுகவின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருந்த வழக்கு என்றால் அது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. அதே போன்று திமுக மீது ஊழல் கரை படிய காரணமாக அமைந்தது 2ஜி அலைக்கற்றை வழக்கு. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
2ஜி வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே திமுக இனி வரவுள்ள தேர்தல்களில் மக்களை சந்திக்க நேரிடும் நிலையில் தீர்ப்பு சாதகமாக இருக்குமா பாதகமாக அமையுமா என்ற அச்சம் திமுகவினர் அனைவருக்குமே இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்பு திமுகவினர் அதிக அளவில் திரண்டனர்.
கனிமொழி, அவரின் கணவர் அரவிந்த், தாயார் ராஜாத்தி அம்மாள், திமுகவின் மூத்தநிர்வாகிகள் டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றிருந்தனர். இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு அளித்ததையடுத்து, திமுகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் போது இந்த மிகப்பெரிய ஊழல் நடந்ததாக பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததோடு, இதனை எதிர்த்து போராட்டங்களையும் நடத்தியது. இதனிடையே நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது திமுகவின் எதிர்காலத்தை காப்பாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications