காங்கிரஸ் ரெண்டாஆஆயிரம்.. பாஜக ரெண்டாஆஆயிரத்து நூறு.. பிம்பிளிக்கி பிளாப்பி ஹரியானா!
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ், பெண்களுக்கு மாதம் ரூ.2000 தருவதாக அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக, பெண்களுக்கு ரூ.2,100 தருவதாக அறிவித்திருக்கிறது. போட்டி போட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகள் அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு இங்கு பலத்த அடி விழுந்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிருப்தி இருக்கிறது. இதையெல்லாம் மீறி கட்சி எப்படி வெற்றிப்பெறபோகிறது? என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், வெற்றியை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்சி களமிறக்கியிருக்கிறது.
இந்நிலையில், இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் முதல்வர் நயாப் சிங் சைனி, ஹரியானா பாஜக தலைவர் மோகன் லால் படோலி முன்னிலையில், மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இதில் குறிப்பிடதக்க அம்சமாக பெண்களுக்கான உதவித்தொகை திட்டம் இருக்கிறது. அதாவது, நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த காங்கிரஸ், பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ.2100 உதவி தொகையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள், பாஜக காங்கிரஸை பார்த்து காப்பி அடித்துள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.
பெண்களுக்கான உதவித்தொகை தவிர, ஹரியானாவில் 10 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு நகரத்திலும் சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும்,
சிராயு-ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் வரை இலவச காப்பீடு வசதி
70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
2 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை
5 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை, மற்றும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தில் இருந்து மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு 5 லட்சம் வீடுகள்
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சி மையம்
என இப்படியாக 20 வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications