ஜெய்ப்பூரை தட்டி தூக்கிய பாஜக! ராஜஸ்தானில் வெற்றி கணக்கை தொடங்கியது.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ்
ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் ஜெய்ப்பூர் தொகுதியை கைப்பற்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கான தனது முதல் வெற்றியை பாஜக பதிவு செய்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் என 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை ராஜஸ்தானை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், அங்கு எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக தற்போது பாஜக ஆட்சி பிடித்துள்ளது. எனவே லோக்சபா தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

பாஜக சார்பில் 3 பேர் முக்கிய வேட்பாளராக இருக்கின்றனர். போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நிறைந்திருக்கும் கோட்டா லோக்சபா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்.
ஆனால் 1971க்கு பிறகு யாரும் இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது கிடையாது. ஓம் பிர்லாவை பொறுத்த வரை, கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றால், 1971க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார். பிற்பகல் 3 மணி நிலவரப்படி இந்த தொகுதியில் ஓம் பிர்லா 6,32,112 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார்.
இம்மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ள பாஜகவின் அடுத்த இரண்டாவது பெரிய தலைக்கட்டு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார். இவர் மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போட்டியிடும் ஜோத்பூர் தொகுதியிலும் காங்கிரஸ் vs பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். கோட்டாவை போலவே இதிலும் யாரும் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்றது கிடையாது.
ஷெகாவத் கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த முறை வெற்றி பெற்றால், தொடர்ந்து 3வது முறை வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார். தற்போதைய நிலவரப்படி இவர் 55,3955 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார்.
ராஜ்தானில், பாஜக களமிறக்கியிருக்கும் மூன்றாவது தலைக்கட்டு, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆவார். இவர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று தொழிலாளர், வேலை வாய்ப்பு, வனம் மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் போட்டியிடும் ஆல்வார் தொகுதியில் காங்கிரஸ் கடந்த காலங்களில் அதிக முறை ஜெயித்திருக்கிறது. தற்போது 6,09,939 வாக்குகளுடன் இவர் முன்னணியில் இருக்கிறார்.
இது தவிர மாநிலத்தின் தலைநகராக உள்ள ஜெய்ப்பூரில் பாஜகவின் வேட்பாளர் மஞ்சு சர்மா வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸை விட 3,31,767 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
மாலை 4 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒரு வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 24ல், 13 தொகுதியில் முன்னணியில் இருக்கிறது. காங்கிரஸ் 8 தொகுதியிலும், சிபிம் 1, ஆர்எல்டிபி 1, பாரத் ஆதிவாசி கட்சி 1 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் இம்மாநிலத்தில் பாஜக 24+1 தொகுதிகளை அப்படியே அள்ளியிருந்தது. ஆனால் இந்த முறை பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் டஃப் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications