பயங்கரவாதி பெயரில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இரவில் பரபரத்த பெங்களூர்! கடைசியில் ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் சிவாஜி நகரில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்குள்ள மசூதிக்கு பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ளதாக இரவில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் நகரில் முக்கிய இடங்களில் ஒன்று சிவாஜி நகர். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக சிவாஜி நகர் இருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலும் தமிழ் பேச தெரிந்தவர்கள்.
இந்நிலையில் தான் நேற்று இரவு 10 மணிக்கு பெங்களூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. போனில் பேசிய நபர் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.

அதாவது, ‛‛பெங்களூர் சிவாஜிநகரில் ஆஜாம் மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்துள்ளனர். இது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவது உங்களின் கைகளில் தான் உள்ளது'' எனக்கூறிவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் ஷாக்கான கட்டுப்பாட்டு அறை ஊழியர் அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு உடனடியாக சிவாஜி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் வேகமாக மசூதிக்கு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் நடத்த விஷயத்தை கூறிவிட்டு மசூதிக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மசூதியில் ஒரு இடம் கூட விடாமல் அனைத்து பகுதிகளிலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசூதியில் வெடிகுண்டு எதுவும் இல்லாததும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் மசூதி நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் மசூதிக்கு பயங்கரவாதிகள் குண்டு வைத்திருப்பதாக பொய்யான தகவலை கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபரின் எண்ணை வைத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மசூதியில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபர் பெங்களூரில் இருந்து பேசவில்லை என்பதும், அவர் பெங்களூருவுக்கு வெளியே இருந்து தொடர்பு கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு சிவாஜி நகரில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications