மாநில உரிமைகள் விவகாரத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்கு போல இடம் பிடித்த மு.க.ஸ்டாலின் வழக்கு!
சென்னை: நாட்டின் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் இந்திய வரலாற்றில் எப்போதும் முன்னுதாரணமாக இருப்பது எஸ்.ஆர். பொம்மை வழக்கு. தற்போது இந்த பட்டியலில் ஆளுநர் ஆர்.என்.ர்விக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் இணைந்துள்ளது.
நாடு விடுதலை அடைந்த காலம் முதலே மத்தியில் ஆளும் அரசு நினைத்த உடன், மாநில அரசுகளைக் கலைத்துவிடக் கூடிய அதிகாரமாக இருந்தது அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு. மத்திய அரசு நினைத்தாலே மாநில அரசுகளைக் கலைத்து பந்தாடிக் கொண்டிருந்த காலமும் இருந்தது. தமிழ்நாட்டில் 1976-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும் 1990-ம் ஆண்டும் இப்படித்தான் திமுக, அதிமுக, திமுக ஆட்சிகள் கலைக்கப்பட்டன.

கர்நாடகா எஸ்.ஆர். பொம்மை
கர்நாடகாவில் 1988-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக எஸ்.ஆர்.பொம்மை பதவி வகித்தார். ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் தந்தைதான் எஸ்.ஆர்.பொம்மை. கர்நாடகாவின் எஸ்.ஆர். பொம்மை அரசு 1989-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன். இவரது பதவி காலத்தில்தான் தமிழ்நாட்டில் 1990-ல் திமுக ஆட்சியும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது
எஸ்.ஆர். பொம்மை ஆட்சி கலைப்பு ஏன்?
கர்நாடகாவில் 1988-ல் ஜனதா தளம், லோக் தளம் கட்சிகள் இணைந்து எஸ்.ஆர். பொம்மை தலைமையில் ஆட்சி அமைத்தது. சில நாட்களிலேயே ஜனதா தளத்தின் மொலகேரி, தமக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது; தம்மையே முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநராக இருந்த வெங்கடசுப்பையாவை சந்தித்தார். இதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஆளுநர், உடனடியாக எஸ்.ஆர்.பொம்மை அரசை கலைக்க ஜனாதிபதி வெங்கட்ராமனுக்கு பரிந்துரைத்தார். அப்போது ஜனதா தளத்தின் 19 எம்.எல்.ஏக்களுக்கும் தாங்கள் எஸ்.ஆர். பொம்மைக்குதான் ஆதரவு என அறிவித்தனர். ஆனால் இதை பற்றி கவலைப்படாமலேயே ஜனாதிபதி வெங்கட்ராமனும், எஸ்.ஆர். பொம்மை ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.
தமது ஆட்சிக் கலைக்கப்பட்டதால் எஸ்.ஆர்.பொம்மை சும்மா இருக்கவில்லை. மாநில அரசுகளை நினைத்தநேரத்தில் கலைத்து போடுகிற இந்திய அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையை கையில் எடுத்தார்.
356-வது பிரிவு என்பது என்ன?
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசியல் சாசனத்தின் 93-வது பிரிவு என்பது அன்றைய மாகாணங்களில் அவசர நிலையை அமல்படுத்துவதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் தந்தது. நமது நாடு விடுதலை அடைந்த போது இந்த 93-வது பிரிவுதான் 356-வதாக உருமாறியது. இந்த 356-வது பிரிவுதான் மாநில அரசுகளை அரசியல் ரீதியாக இலகுவாக பழிவாங்கும் மத்திய அரசின் ஆயுதமாகவும் வலம் வந்து கொண்டிருந்தது.
1994-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு
முதலில் எஸ்.ஆர். பொம்மை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு எஸ்.ஆர். பொம்மை மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனால் உச்சநீதிமன்ற படிகளேறினார் எஸ்.ஆர்.பொம்மை. இந்த வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் பல ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது. பின்னர் 1994-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது
ஆட்சியை கலைத்தால் நீதிமன்றமும் தலையிடும்
எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசை ஜனாதிபதி கலைத்தாலும் அது நீதிமன்றத்தின் ஆய்வுக்குரியதுதான் என அதிரடியாக அறிவித்தது. அதாவது மாநில அரசுகளைக் கலைத்து விளையாடினால் அதில் நீதிமன்றம் தலையிடும்; மாநில அரசுகளைக் கலைத்தது செல்லாது என்றும் கூட நீதிமன்றம் தீர்ப்பளிகும் என அதிரடியாக சொன்னது உச்சநீதிமன்றம். (பின்னாளில் இத்தகைய தீர்ப்புகளும் வந்தன என்பது வரலாறு).
நினைத்த நேரத்தில் கலைக்க முடியாது- நாடாளுமன்ற ஒப்புதல் தேவை
அத்துடன் நிற்கவில்லை உச்சநீதிமன்றம்.. ஒரு மாநில அரசை 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைப்பது என முடிவு செய்துவிட்டால் உடனே செய்யக் கூடாது; நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றும் கிடுக்குப்பிடி போட்டது. இந்த ஒப்புதல் கிடைக்கும் வரையில் ஒரு மாநில அரசை சஸ்பெண்ட் மட்டுமே செய்து வைக்க முடியும்; ஆட்சியை முழுமையாக கலைத்துவிட முடியாது என்றது உச்சநீதிமன்றம். ஒரு மாநில அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் போனால் பழைய அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றது உச்சநீதிமன்றம்.
எப்போது ஆட்சியை கலைக்கலாம்?
மேலும், ஒரு மாநில அரசின் நிர்வாக கட்டமைப்பு சீர்குலைந்து போனால் ஆட்சிய் கலைக்கக் கூடாது; அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சீர்குலைந்தால்தான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும் எனவும் கறார் உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
356-வது பிரிவை கையில் எடுக்க அஞ்சும் மத்திய அரசு
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்த பின்னர்தான் 1994-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் கலைத்து விளையாடும் மத்திய அரசின் ஆட்டம் அடங்கியது. 1998-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைத்தாக வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், ஜெயலலிதா வலியுறுத்திப் பார்த்து நெருக்கடி தந்தார். இந்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தீர்ப்பு காரணத்தாலேயே, அன்றைய திமுக ஆட்சியை கலைக்க மறுத்தார் வாஜ்பாய்; இதனால் தமது ஆட்சியையே இழந்தார் ; இந்த நன்றிக் கடனுக்காக 1999-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது என்பதும் வரலாறு.
சரித்திரம் படைத்த பொம்மை வழக்கு
மாநில அரசுகளை எஸ்.ஆர். பொம்மை தமது வழக்கின் தீர்ப்பு மூலம் காப்பாற்றியது மாநில உரிமைகளின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதே பாணியில்தான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் வழக்கு பெற்றுத் தந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் சரித்திரம் பேசும் தீர்ப்பாக அமைந்துவிட்டது.
திமுக அரசும் ஆளுநர் ரவியும்
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவர் பதவி வகித்த நாள் முதலே தமிழ்நாட்டின் திமுக அரசுக்கு குடைச்சலாக இருந்து வந்தார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களை திருப்பி அனுப்புவது, 2-வது முறையாக நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைப்பது என்பதாக ஆளுநரின் ஆட்டம் நீடித்தது. இதற்கு கடிவாளம் போட உச்சநீதிமன்றத்தை நாடியது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பை அனைத்து மாநில அரசுகளும் மாநில கட்சிகளும் கொண்டாடுகின்றன. ஏனெனில், மாநில ஆளுநர் என்பவருக்கு தனிப்பட்ட வீட்டோ அதிகாரம் எதுவும் இல்லை; அவர் மாநில அரசின்- அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்தான் என அழுத்தம் திருத்தமாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் ஒரு மாநில அரசு மசோதாவை அனுப்பி வைத்தால் அதன் மீது மிக அதிகபட்சம் 4 மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுத்தே ஆக வேண்டும் என கால வரையறையையும் நிர்ணயித்தது.
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தமக்கான சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதில் ஒன்றுதான், மாநிலங்களின் பல்கலைக ்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டு மாநில முதல்வரே வேந்தராக பதவி வகிக்கலாம் என்ற மசோதாவும். இதன் மூலம் மாநில முதல்வர்களே, பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் என்ற உரிமையும் நிலைநாட்டப்பட்டுவிட்டது. இதனால்தான் எஸ்.ஆர். பொம்மை வழக்கு போல மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications