ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகியதாக சம்பாய் சோரன் அறிவிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். முன்னதாக தாம் பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார். அத்துடன் ஆகஸ்ட் 30-ந் தேதி சம்பாய் சோரன், பாஜகவில் இணைவார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் கூறியிருந்தார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த நிலையில் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

அப்போது தற்காலிக முதல்வராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானதால் சம்பாய் சோரனிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கபட்டது. ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்.
இதில் சம்பாய் சோரன் கடும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் சிலருடன் பாஜகவில் சம்பாய் சோரன் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் சம்பாய் சோரனை பாஜகவில் சேர்க்க சில தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்களுடன் சம்பாய் சோரன் தரப்பு தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தைகளையடுத்து தாம் பாஜகவில்தான் இணைய உள்ளதாக அறிவித்தார் சம்பாய். இதனை உறுதிப்படுத்திய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ஆகஸ்ட் 30-ந் தேதி, சம்பாய் சோரன் பாஜகவில் இணைவார் என கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகிவிட்டதாக சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சம்பாய் சோரன் விலகல், தாக்கத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications