கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்!
ராய்ப்பூர்: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்ந்து பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜை சத்தீஸ்கர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த காளிசரணை கைது செய்த போலீசார் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் காளிசரண் மகராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சத்தீஸ்கரில் சாமியார்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளிசரண் மகாராஜ் மகாத்மா காந்தி குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக பேசினார்.

முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு
சத்தீஸ்கர் நிகழ்ச்சியில் காளிசரண் மகாராஜ் பேசியதாவது: நம் கண் முன்னாலேயே இந்தியா 2 துண்டுகளாக பிரிக்கப்பட்டது. ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவை ஏற்கனவே தனி தேசங்களாகிவிட்டன. பாகிஸ்தானும் வங்கதேசமும் நம் கண் முன்பே பிரிக்கப்பட்டன. தங்களது அரசியலுக்காக தேசத்தை பிரித்தனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி) இந்தியாவை சீரழித்தவர். காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு வீரவணக்கம். நீங்கள் கலவரத்தில் ஈடுபடுங்கள் என நான் சொல்லவில்லை. நீங்கள் அதற்கு தயாராகவும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கின்றனர். நீங்கள்தான் (இந்துக்கள்) இன்னமும் தயாராகவில்லை. போலீசார் மட்டும் அங்கே இருக்காவிட்டால் நாம் அவர்களது கதையை முடித்திருப்போம்.

வல்லபாய் பட்டேலும் பிரதமர் பதவியும்..
இங்கே பேசியவர்கள் அனைவரும் போலீசார் எப்படி ஒத்துழைப்பு தரவில்லை என கூறினர். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் யாத்திரைகளை நடத்தக் கூடாது என போலீசார் சொல்வதாக தெரிவித்தீர்கள். போலீசார் சொல்வதில் என்ன தவறு? ஏனெனில் போலீசார் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசாங்கத்தை அரசியல் தலைவர்கள் கட்டுப்படுத்துகிறார். இந்த தேசத்தின் தலைவராக ஒரு இந்து இருந்தால் மட்டுமே இந்துக்களுக்கு போலீசார் ஆதரவு தருவார்கள். நாட்டின் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் பதவியேற்க 14 பேர் ஆதரவு தந்தனர். ஆனால் நேருவுக்கு ஒருவர் கூட ஆதரவு தரவில்லை. ஆனாலும் நேரு நாட்டின் பிரதமரானார். இதற்கு காரணம் காந்திதான். காந்தி-நேரு பரம்பரைதான் இந்திய அரசியலை ஆட்சி செய்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் தேசத்தின் பிரதமராக இருந்திருந்தால் நமது நாட்டுக்கு அது பொற்காலமாக இருந்திருக்கும். இந்தியா ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஜகத்குருவாக மாறி இருக்கும். அமெரிக்காவை விட இந்தியா மிகப் பெரிய வல்லரசாகி இருக்கும். நாட்டின் விடுதலைக்காக பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ் என பலரும் தியாகம் செய்தனர். அவர்கள் எல்லாம் இந்த தேசத்தின் விடுதலைக்குப் போராடாதவர்களா?

காந்தியடிகள் மீது அவதூறு
தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்டவர்களில் 80% சீக்கியர்கள். இதர மதத்தினர் வெறும் 20%தான். ஆனால் நாட்டின் விடுதலைப் போராட்டம் என்றால் காந்திதான் பெருமைப்படுத்தப்படுகிறார். அவர் என்ன பிரிட்டிஷ் போலீசாரிடம் அடிவாங்கினாரா? பகத்சிங் உள்ளிட்ட மூவரையும் தூக்கிலிடுவதை காந்தி நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் காந்தி அப்படி செய்யவில்லை. என்னுடைய சடலத்தின் மீதுதான் பிரிவினை நடக்கும் என்றார் காந்தி. ஆனால் நாடு துண்டாக்கப்பட்ட போது காந்தி உயிருடன்தான் இருந்தார். நாடு பிரிவினையின் போது சீக்கியர்களும் இந்துக்களும் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஜின்னாவின் உத்தரவின் பேரில் 27 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டன. ஆனால் காந்தியோ பாகிஸ்தானுக்கு ரூ55 கோடி தர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். பிரிவினையின் போது மசூதிகளில் சீக்கியர்கள் தஞ்சம் அடைந்தனர். ஆனால் மசூதிகளை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர் காந்தி. அதனால்தான் காந்தியை நான் வெறுக்கிறேன்.

கொலையாளி கோட்சேதான் மகாத்மா
நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆனால் காந்தி இதனை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கரையும் வீர சாவர்க்கரையும் அவமதித்தவர் காந்தி. யாரும் இந்த தேசத்துக்கு தந்தையாகிவிட முடியாது. இந்தியா என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒருவர் எப்படி இந்த தேசத்துக்கு தந்தையாக இருக்க முடியும்? அப்படிப் பார்த்தால் சிவாஜி, ராணா பிரதாப்சிங், சாணக்யா என பலரும் இருக்கிறார்களே.. நாட்டு விடுதலையின் போது 500 சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் தேசத்தந்தையாக முடியும். இந்தியாவை ஒருமுஸ்லிம் நாடாக மாற்றப்படுவதை தடுத்த நாதுராம் கோட்சேவுக்கு நான் நன்றி சொல்வேன். காந்தியடிகள் மகாத்மா அல்ல. நாதுராம் கோட்சேதான் மகாத்மா. இவ்வாறு காளிசரண் மகாராஜ் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சத்தீஸ்கர் போலீஸ் அதிரடி கைது
காளிசரண் மகாராஜ் மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் காளிசரண் மகாராஜூக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதேபோல் சத்தீஸ்கர் போலீசாரும் காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் மகாராஷ்டிராவுக்கு செல்லாத காளிசரண் மகாராஜ், மத்திய பிரதேசத்தில் தப்பி ஓடி தலைமறைவாக பதுங்கி இருந்தார். இன்று அதிகாலை சத்தீஸ்கர் போலீசார் சாமியார் காளிசரனை கைது செய்தனர். அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications