ஹரியானா சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பை குழிதோண்டிப் புதைத்து தலையில் மண் அள்ளி கொட்டும் காங்கிரஸ்?
சண்டி: ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் 'எதிரிகளாக' நின்று மல்லுக்கட்டி வருவது அக்கட்சியின் மேலிடத்தை கதிகலங்க வைத்துள்ளது. ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலையை எளிதாக அறுவடை செய்து வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை தலைவர்களின் தன்முனைப்பால் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஹரியானாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.

ஹரியானாவில் 2019-ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஜேஜேபியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. ஆனால் பாஜக தலைவர்களிடையே கடுமையான உட்கட்சிப் பூசல் வெடித்து கொண்டே இருந்தது. இதனால் முதல்வர் மனோகர் லால் கட்டார் மாற்றபட்டு நயாப் சிங் சைனி முதல்வரானார். இருந்த போதும் பாஜகவின் உட்கட்சி மோதல் முடிவுக்கு வரவில்லை. அத்துடன் பாஜகவை ஆதரித்த ஜேஜேபியும் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று கூட்டணியை விட்டு விலகியது.
பாஜகவின் இந்த உட்கட்சி பூசல்கள், கூட்டணி முறிவு அனைத்தும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மிகப் பெரும் சாதகம்தான். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜிவாலா, பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் ஆளுக்கு ஒரு திசையில் முட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்களில் குமாரி செல்ஜாவும் ரன்தீப் சுர்ஜிவாலாவும் ஓரணியாகவும் பீபிந்தர் சிங் ஹூடா தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் கடும் கோபமடைந்த காங்கிரஸ் மேலிடம் கடந்த வாரம் அத்தனை ஹரியானா தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து டோஸ் விட்டு அனுப்பியது. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்த விவகாரங்களில் தலையிட்டு கடுமை காட்டினாராம். ஆனாலும் ஹரியானா திரும்பியதும் வழக்கம் போல ஆளுக்கு ஒரு போக்கில் காங்கிரஸ் தலைவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டி வெற்றி பெறும் வாய்ப்பைக் கூட குழிதோண்டிப் புதைக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications