அண்ணாமலை பொறுப்பு வகித்த தொகுதி..சிடி ரவியை ஸ்கெட்ச் போட்டு தோற்கடித்த காங்..மகிழ்ச்சியில் மஜத..ஏன்?
பென்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருக்கும் சி.டி ரவி தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்ற போதும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் சி.டி ரவியின் தோல்வியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதற்கான காரணத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் வென்று இருந்தது.
இந்த தேர்தலில் 100 இடங்களை நெருங்கி எப்படியும் வென்று விடலாம் என கனவில் இருந்த பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தனிப்பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. குறிப்பாக பாஜகவின் 11 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி , சிக்மகளூரு தொகுதியில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சிக்மகளூரு தொகுதியில் வென்று வரும் சி.டி ரவியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மஜத சிறப்பு கவனம் செலுத்தியது. தீவிர இந்துத்வா ஆதரவாளராக அறியப்படும் சி.டி ரவி போட்டியிடுவதால் இந்த தொகுதி மிகுந்த கவனம் பெற்று இருந்தது. போதாதக்குறைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்புகளுக்குள் வந்த தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
அண்ணாமலை ஒருபக்கம் தொகுதிக்குள் சுற்றி சுற்றி வர.. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் சிக்மகளூரு தொகுதியில் மேற்கொண்டனர். இந்த தொகுதியில் சி.டி ரவியை எதிர்த்து அவரது 17 ஆண்டு கால நண்பரான எச்.டி.தம்மையா காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். சிக்மகளூரு பாஜகவின் கோட்டை என்ற பிம்பம் இருந்தது வந்தது.
இதனால், எப்படியும் வென்று விடலாம் என சி.டி.ரவியும் நம்பிக்கொண்டு இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சிக்மகளூரு மட்டும் இல்லை. மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், அந்த தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த அண்ணாமலையும் அதிர்ச்சி அடைந்தார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், காங்கிரஸ் வெற்றியை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் கொண்டு வருவதுதான். ஏனெனில் எப்படியும் சி.டி ரவியை வீழ்த்தி விட வேண்டும் என்பதற்காக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கடும் முயற்சி கொண்டது. தேர்தலில் சி.டி ரவி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும்.. நாம தோற்றாலும் பரவாயில்லை..
பாஜக ஜெயிக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக குமாரசாமி கட்சியின் எம்.எல்.சி போஜ் கவுடாவிற்கு அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பொன்னாடை போற்றி பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இத்தனைக்கும் சிக்மகளூரு தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டது. ஆனால் போஜ் கவுடா சொந்த கட்சிக்கு ஆதரவு அளிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து சி.டி ரவி தோற்கடிப்பதை உறுதி செய்து விட்டார். இப்படி காங்கிரசும் மதசாரப்பற்ற ஜனதா தளமும் சேர்ந்து தன்னை தோற்கடித்து விட்டதே என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கன்னத்தில் கை வைத்த படி தேர்தல் முடிவுகளை பார்த்து யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications