மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு யோகி ஆதித்யநாத் பெயரை அறிவிக்க கும்பமேளாவில் சதி.. அகிலேஷ் 'திடுக்'
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதிய பிரதமராக அறிவிக்க, பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சதி நடந்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உ.பி.யில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சியை பாஜக தம்முடைய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. எந்த ஒரு முறையான ஏற்பாடும் செய்யப்படாத ஒரு நிகழ்வாகவே கும்பமேளா நடைபெற்றது.

உ.பி, மகா கும்பமேளா பெரும் தோல்வி அடைந்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் காரணம். இந்த கும்பமேளாவை பாஜகவின் ஒரு நிகழ்ச்சியாகவே மாற்றுவதற்கு உ.பி. அரசு முயற்சித்தது.
உ.பி. மகா கும்பமேளாவின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, புதிய பிரதமராக யோகி ஆதித்யநாத்தை அறிவிக்கவும் ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை. உ.பி. கும்பமேளா நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமே உ.பி. பாஜக அரசு கடைபிடித்த விஐபி கலாசாரம்தான். விஐபிகளுக்கு முக்கியத்துவம் வந்த உபி பாஜக அரசு, இந்து பக்தர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்றார்.
பிரதமர் பதவி- என்ன கலகம்?
பாஜகவில் 75 வயது நிறைவடைந்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுவது வழக்கம். பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கும் இந்த கதிதான். பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் செப்டம்பரில் 75 வயது நிறைவடைகிறது. இதனால் பிரதமர் பதவியில் மோடி தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் சென்ற மோடி, செப்டம்பருக்கு பின்னர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறினார் என உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியிருந்தார். மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர் எனவும் ராவத் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்திருந்தது. 75 வயதை கடந்த பின்னரும் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி தொடர்ந்து நீடிப்பார் என பாஜக அறிவித்திருந்தது. இந்த பின்னணியில் உ.பி. கும்பமேளாவிலேயே மோடிக்கு எதிராக புதிய பிரதமராக யோகி ஆதித்யநாத்தை அறிவிக்கவும் திட்டமிட்டிருந்தனர் என்கிறார் அகிலேஷ் யாதவ்.












Click it and Unblock the Notifications