ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு 2 முறை சலுகை கூடாது.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கும் இரண்டாவது முறையாக தண்டனைச் சலுகை வழங்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு தவறான நடவடிக்கை என்றும் மத்திய அரசு வாதிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இதில், மத்திய அரசு சார்பில் ஐந்தாவது நாளாக இம்மனு மீதான வாதங்கள் நேற்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்பட்டன.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடிய போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ.தான் முழுமையாக விசாரித்தது. அவ்வாறு இருக்கும்போது இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஆயுள் கைதிகளை தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்குக் கிடையாது.
தமிழக அரசு இதுபோன்ற முடிவை எடுக்கும் முன், மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இதுவே சட்ட நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதுடன், மத்திய அரசின் கருத்தையும் அறியாமல் செயல்பட்டது தவறு.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் அனைவருக்கும் ஏற்கெனவே தண்டனைக் குறைப்பு சலுகையை நீதிமன்றம் அளித்துவிட்டது. இதற்கு மேலும் அவர்களுக்கு சலுகை காட்டி விடுதலை செய்ய முற்பட்டால் அது குற்றவாளிகள் ஆதாயம் அடைவதற்கு வழி வகுக்கும்
மேலும், இதுபோன்ற கொடிய குற்றங்களைச் செய்தவர்களை விடுவித்தால் அதன் பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது கடினம். விடுதலை செய்வதற்கு முன் எந்த கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை.
மேலும் 7 பேரின் விடுதலையை வைத்து தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது எனவே, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுத் தரப்பு வாதத்தை நிறைவு செய்து கொள்வதாக ரஞ்சித் குமார் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி வாதிடும்போது, மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு வராது என்று அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு. தமிழக அரசும் அந்த அடிப்படையில்தான் நல்லது, கெட்டதை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.
கூட்டாட்சி முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வேறுபட்ட கருத்துகள் நிலவுவது சாதாரண விஷயம். இதே நிலைதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நீடித்து வருகிறது' என்றார்.
உணவு இடைவேளைக்கான ஒரு மணி நேரம் நீங்கலாக சுமார் நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக வாதங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்து விட்டதால், தமது வாதத்தை மேலும் தொடர தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அனுமதி கேட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு (ஆகஸ்ட் 4) ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications