ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: 2 பைன் போட்டும் ஆப்சென்ட் ஆன அரசு வழக்கறிஞர்
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்கு நீதிபதி டி'குன்ஹா ஏற்கெனவே ரூ 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, இதற்கு நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சொத்துகுவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெடோ அக்ரோ ஃபார்ம்,லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்,ராம்ராஜ் அக்ரோ மற்றும் சைனோரா ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது.
அரசு வழக்கறிஞர் ஆப்சென்ட்
மெடோ அக்ரோ நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் ஆர்.தியாகராஜனும், லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட், ராம்ராஜ் அக்ரோ மற்றும் சைனோரா ஆகிய நிறுவனங்கள் சார்பாக வழக்கறிஞர் குலசேகரனும் ஆஜராயினர்.அரசு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி ஆஜரானார்.
நீதிபதி அதிருப்தி
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகாமல் இருந்ததற்கு நீதிபதி டி'குன்ஹா ஏற்கெனவே ரூ 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இறுதிக்கட்ட விசாரணை
இதனைத் தொடர்ந்து மெடோ அக்ரோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் தியாகராஜன்,''சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால், எங்களுடைய மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனம் முன் வைத்த வாதத்தையே மற்ற நிறுவனங்களும் முன்வைத்தன.
வழக்கை இழுத்தடிக்க திட்டம்
அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கவே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். எனவே மெடோ அக்ரோ நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்''என்றார்.
மார்ச் 21ல் விசாரணை
இதைத் தொடர்ந்து மெடோ அக்ரோ நிறுவனத்தின் மனு மீதான அடுத்த கட்ட விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு நீதிபதி டி'குன்ஹா ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications