வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வேண்டாம்.. மிசோரமில் கிளம்பிய எதிர்ப்பு.. இப்படியொரு காரணமா?
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கடந்த 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், டிசம்பர் மாதம் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆனால் வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் சில ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றன. ஏனெனில் இந்த மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 87 சதவிகிதமாக இருக்கின்றனர்.
எனவே வாக்கு எண்ணிக்கை தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருவதால் அதனை மாற்ற வேண்டும் என ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்), காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தேவாலயம், மாணவர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக்களும் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
வாக்குகள் எண்ணப்படுவதால் பொது அமைதிக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தால் போதுமான எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியிருந்தனர். எனவே வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த என்ஜிஓ ஒருங்கிணைப்புக் குழுவின் தூதுக்குழு டெல்லி சென்றிருக்கிறது. இவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications