பாலியல் புகார்: சூழல் ஆர்வலர் பச்சோரியிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: பாலியல் புகார் குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர் ராஜேந்திரகுமார் பச்சோரியிடம் விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராகவும் அரசு சாரா எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TERI) தலைமை இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார் ராஜேந்திரகுமார் பச்சோரி( வயது 74).

இவர் 2007 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க துணை அதிபர் அல் கோருடன் சேர்ந்து பெற்றவரும் கூட. கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் பச்சோரியிடம் பணியாற்றத் தொடங்கிய ஆராய்ச்சி மாணவி ஒருவர், பச்சோரியின் பலவிதமான பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரின் தொல்லை தொடர்ந்ததால், பொறுமை இழந்த அந்த மாணவி, அமைப்பின் மற்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
அப்போதும் தொல்லை தொடரவே வேறு வழியின்றி டெல்லி லோதி காலனி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜேந்திர பச்சோரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் தன் மீதான பாலியல் புகார்களை மறுத்த பச்சோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதனால் அவரை வரும் 23-ந் தேதி வரை கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் இன்று பச்சோரியிடம் போலீசார் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. அத்துடன் விசாரணைக்கு பச்சோரி ஒத்துழைக்கவும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications