தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவமதிப்பு.. திமுக ஒன்றிய செயலாளர் மீது சேர்மன் புகார்.. தலைமைக்கு கடிதம்!
திமுக பொதுக்கூட்டத்தில் கணவருடன் சேர்ந்து தீக்குளிக்கப் போவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக யூனியன் சேர்மன்.
தென்காசி : தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பெண் சேர்மன் செல்லம்மாள், தன்னை திமுக ஒன்றிய செயலாளர் மக்கள் பணி செய்யவிடவில்லை, கட்சியிலும் மரியாதை இல்லை எனக் குற்றம்சாட்டி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் செல்லம்மாள் முருகேசன். இவர் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த வார்டில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்திற்கே தனக்கு அழைப்பு இல்லை என்றும், நோட்டீஸில் கூட பெயர் போடாமல் புறக்கணித்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டி கடிதம் எழுதியுள்ளார் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகேசன்.

யூனியன் சேர்மன் கடிதம்
அந்தக் கடிதத்தில் செல்லம்மாள் முருகேசன், ஒவ்வொரு யூனியன் கூட்டத்திலும் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அரசு ஒப்பந்ததாரர் ஆகியோர் தன்னை மட்டம்தட்டிப் பேசி, மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள் என்றும், ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் தன்னை துன்புறுத்தி வருகிறார்கள் என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவுன்சிலர்களிடமும் தனக்கு மரியாதை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

போஸ்டர் ஒட்டுவது முதல்
மேலும், தன் கணவர் முருகேசன், கடந்த 35 ஆண்டு காலமாக திமுக கட்சிக்காக போஸ்டர் ஒட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் செய்து மேடைப் பேச்சாளர், கிளை செயலாளர் என்று தகுதி இருந்தும் மதிக்கப்படவில்லை என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார் யூனியன் சேர்மனான செல்லம்மாள்.

எனது வார்டிலேயே பெயர் இல்லை
மேலும், தமிழ்நாட்டிலேயே பைக்கில் செல்லும் ஒரே ஒன்றியக் குழு தலைவர் நானாகத்தான் இருப்பேன் என்றும், என்னுடைய ஒன்றியத்தில் எனது வார்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை. நோட்டீஸில் பெயர் போடவும் இல்லை. அந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறேன் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் செல்லம்மாள்.

தீயிட்டுக் கொளுத்திக் கொள்வோம்
மேலும், இதனால் எனக்கு வழி தெரியவில்லை. எங்கள் பகுதியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்ட மேடையிலேயே உயிரை மாய்த்துக்கொள்ள நானும் எனது கணவரும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொள்ளப் போகிறோம் என்று யூனியன் சேர்மன் செல்லம்மாள் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் குறித்த தகவல் பரவிய நிலையில், பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நடவடிக்கை?
தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய சேர்மன், தன்னை திமுக ஒன்றிய செயலாளரும், கட்சியினரும் மதிப்பதில்லை, தனது சொந்த வார்டில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்ட நோட்டீஸில் கூட தனது பெயரைப் போடவில்லை என்றும் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தலைமை உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications