கெட்ட சகுனம், பிக்பாக்கெட்.. மோடி மீதான ராகுல் சரமாரி விமர்சனம்- பறந்து வந்தது தேர்தல் ஆணைய நோட்டீஸ்
ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்றும் பிக்பாக்கெட் கும்பலை சேர்ந்தவர் என்றும் விமர்சித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி தமது பேச்சுக்கு வரும் 25-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க கெடு விதித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சில நாட்களாக மிக கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்று போனதற்கு காரணமே பிரதமர் மோடி எனும் கெட்ட சகுனம்தான் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்தார் ராகுல்.

ராஜஸ்தான் பிரசாரம்: இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நாம் அனைவரும் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்கிறோம், ஆனால் இந்த 'பாரத மாதா' யார்? 'பாரத மாதா' என்பது இந்த நாட்டு மக்கள்தான். 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்லும் போது, நாட்டு மக்களையும், உங்கள் பெற்றோர்களையும், அவர்களின் பெற்றோர்களையும், அதாவது அனைவரையும் பாராட்டுகிறோம்.
அக்னிவீர் திட்டம்: முன்பெல்லாம் இந்திய அரசு நாட்டு இளைஞர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது - நீங்கள் நாட்டைக் காப்பாற்றினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்போம் என்று. ஆனால் இப்போது மோடி அக்னிவீரை கொண்டு வந்துள்ளார், அதில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும். ஏனென்றால், ராணுவத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட பணம் முழுவதையும் அதானிக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டார்.
பிக்பாக்கெட் கோஷ்டி: பிக்பாக்கெட்காரர்கள் ஒருவரின் பாக்கெட்டில் பணம் எடுக்க விரும்பினால், முதலில் அவர்கள் செய்வது கவனத்தை திசை திருப்புவதுதான். ஒரு பிக்பாக்கெட் செய்பவர் முன்பக்கத்திலிருந்து வந்து கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொருவர் பின்னால் நின்று பாக்கெட்டுகளிலிருந்து எடுக்கிறார். மூன்றாவது ஒருவர் தேவைப்படும்போது மிரட்டுகிறார். இதேபோல் தான், பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்புகிறார், அதானி பாக்கெட்டுகளை எடுக்கிறார், அமித்ஷா லத்தியை பயன்படுத்துகிறார்.
Election Commission of India issues notice to Congress MP Rahul Gandhi on his 'panauti' and 'pickpocket' jibes at PM Modi, asks him to respond by 25th November pic.twitter.com/CcrIlU6I9o
— ANI (@ANI) November 23, 2023
மோடி, கிரிக்கெட்: மோடியைப் போலவே ஊடகங்களும் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப வேலை செய்கின்றன. எந்த ஒரு ஏழை விவசாயியையும் ஊடகங்களில் நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் மோடி, கிரிக்கெட் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். நாட்டின் வலியை தொலைக்காட்சி ஒருபோதும் காட்டாது, ஏனென்றால் அது உங்களுடையது அல்ல, அதானியுடையது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: ராகுல் காந்தியின் இத்தகைய தொடர் விமர்சனங்கள் பாஜகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்தது. ராகுல் காந்தியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடமும் பாஜகவினர் புகார் கொடுத்திருந்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராகுல் காந்தி தமது பேச்சுக்கு வரும் 25-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications