இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு.. புரட்டியெடுத்த பேய் மழை! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ், கார்கள்!
சிம்லா: இமாசலபிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகாலை வரை விடாமல் கொட்டி தீர்த்த மழையால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த கடுமையான வெள்ள பாதிப்பு காரணமாக வெள்ளம், நிலச்சரிவுகளில் 3 பேர் பலியாகினர். வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெள்ள பாதிப்பின் கடுமையான சேதத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவு முழுவதும் விடியவிடிய பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை முடங்கியது.

மண்டி மாவட்டத்தில் சுந்தர்நகர் நெஹ்ரி பகுதியில் உள்ள பிராக்தா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்டி மாவட்டத்தில் தரம்பூரில் உள்ள சோன்காட், பரந்த் வடிகால்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரையோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. தரம்பூர் நகரில் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு நின்ற 20-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 150 மாணவர்கள் தங்கியிருந்த ஒரு விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. கட்டிடங்களின் மேல் பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தங்கி உயிர்தப்பினர்.
ஷிம்லாவின் மையப்பகுதியில் உள்ள ஹிம்லாண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து பல வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 653 சாலைகள் மூடப்பட்டன. அண்மைக்கால கனமழைக்கு இமாசல பிரதேசத்தில் மட்டும் 404 பேர் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை துணை முதல்வர் முகேஷ் அக்னிகோத்ரி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பேருந்து நிலையம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து பதிவிட்ட அவர், பேருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பிட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
இமாசல பிரதேசத்தில் இந்த பருவமழை காலத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பல்வேறு இடங்களிலும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை பெய்த கனமழையால் இமாசல பிரதேசத்தில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications