
தேர்தல் பிரசார வரலாற்றில் புதிய மைல்கல்.. குஜராத்தில் 50 கி.மீ சாலை பேரணி.. மோடியின் பிரமாண்ட பிளான்
காந்திநகர்: குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்த 'ரோட் ஷோ' பயணம் மாலை தொடங்கி இரவு 9.45 மணி வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களை சந்திப்பதற்காக பிரதமர் மோடி 50 கி.மீ வரை ரோட் ஷோவில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். பிரதமர் வருகையால் இப்பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
நாளை தொடங்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு.. முழு பின்னணி

திட்டம்
இன்று மாலை 3.30 மணியளவில் இந்த பயணத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார். அகமதாபாத்தில் உள்ள நரோதா காமில் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பயணம், தக்கர் பாபாநகர், நிகோல், பாபுநகர், அம்ரைவாடி, மணிநகர், டானிலிம்டா, ஜமால்பூர், காடியா, எல்லிஸ்பிரிட்ஜ், வெஜல்பூர், கட்லோடியா, நாரன்புரா, சபர்மதி மற்றும் காந்திநகர் சவுத் சீட் வழியாக செல்கிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒருமுறையும், இன்று காலை மற்றொரு முறையும் இந்த பகுதிகளின் முக்கியமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்களிப்பு
முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இரண்டாம் கட்ட தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கு 3ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். எனவே பிரதமர் இன்று நடத்தும் ரோட் ஷோவை போலவே ஏழு பேரணிகளை திட்டமிட்டிருக்கிறார். இந்த பிரசாரங்களை முடித்த பின்னர் 5ம் தேதி அகமதாபாத்தின் ராணி பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களிக்கிறார். கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள பாஜக இம்முறையும் வெற்றி பெற தீவிர முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

ஆட்சி
கடந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி சரிந்திருந்த நிலையில், படிதார் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்திருப்பது கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 15% பேர் இச்சமூகத்தை சார்ந்தவராவார்கள். கடந்த 2017 தேர்தலுக்கு பிறகு இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை. எனவே இந்த முறை பாஜக அதிக வாக்குகளுடன் வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான விஜய் ரூபானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல, பிரதமரின் இந்த சாலை பேரணி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கும் எனவும் பாஜக கூறியுள்ளது.

காங்கிரஸ் VS ஆம் ஆத்மி
பாஜக ஒருபுறம் எனில் ஆம் ஆத்மியும் மறுபுறத்தில் இந்த சாலை பேரணிக்கு தயாராகி வருகிறது. குஜராத்தில் ஹர்பஜன்சிங் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுக்கிறார். இன்று நடைபெறும் சாலை பேரணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் ஆகியோருடன் ஹர்பஜன்சிங் பங்கேற்கிறார். ஆம் ஆத்மிதான் இந்த முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் பஞ்சாபை போல குஜராத்திலும் ஆம் ஆத்மி மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள 7 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்றும், இது பாஜகவுக்கு மாற்று அல்ல காங்கிரசுக்கு மாற்றாக களமிறங்கியுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.