அதெப்படி கியூரேட்டரைத் திட்டலாம்... ரவி சாஸ்திரிக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்
மும்பை: மும்பை, வான்கடே மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர் சுதிரைக் திட்டிய இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் குவின்டன் டி காக், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி தலா ஒரு சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியின்போது ஆடுகளம் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், மும்பை வான்கடே ஆடுகளம், பேட்டிங் பிட்சாக இருந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி இந்த தோல்விக்கு ஆடுகளம் மீது பழி போட்டார்.
மேலும், ஆடுகள பராமரிப்பாளரையும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பராமரிப்பாளர் சுதிர்நாயக் மும்பை கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் வீரர் வினோத் காம்பிளி கூறுகையில், ரவி சாஸ்திரி, ஏன் ஆடுகளத்தையும் மிகவும் மரியாதைக்குரிய ஆடுகள வடிவமைப்பாளரையும் குறை சொல்கிறீர்கள்? சரியாக விளையாடாத இந்திய அணியைக் குறை சொல்லவும். நம்பிக்கை இழந்த நிலை என்று தான் இதைச் சொல்லமுடியும் என்றார்.
சஞ்சய் மஞ்ச்ரேகர், சுதிர்நாயக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் "ரவிசாஸ்திரி தனது வரம்பை மீறி மும்பை ஆடுகள பராமரிப்பாளர் சுதிர்நாயக்கை திட்டியுள்ளார். வயதில் முதியவர் என்று பார்க்காமல், முன்னாள் சக டெஸ்ட் கிரிக்கெட் வீரரை அவமதித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications