பிச்சை போட்டால் சிறை.. "இந்த" இந்திய நகரில் அமலுக்கு வரும் ரூல்ஸ்! திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்
போபால்: நமது நாட்டில் எந்தவொரு பகுதிக்கு நீங்கள் சென்றாலும் அங்கு யாசகம் கேட்டு வாழ்பவர்களை நீங்கள் பார்க்க முடியும். ஆனால், இங்கே நமது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றில் பிச்சை எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜன. முதல் இந்த நகரில் நீங்கள் பிச்சை போட்டால் கூட கைதாகி சிறை செல்ல நேரிடும்.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் யாசகம் கேட்டு வாழ்வோரைப் பார்க்க முடியும். இப்படி யாசகம் கேட்டு வாழ்பவர்களை மீட்டு மறுவாழ்வு தர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறை செல்ல நேரிடும்: அதன் ஒரு பகுதியாக நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், இப்போது தங்கள் நகரில் யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ம் தேதி முதல், யாராவது பிச்சைக்காரர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிச்சை போடும் நபர்களைக் கண்காணித்து அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் நடவடிக்கையை அம்மாவட்ட நிர்வாகம் எடுக்கவுள்ளது.
இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏற்கனவே இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளோம். பிச்சை எடுப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதி வரை இந்த பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
பாவம்: வரும் ஜனவரி 1ம் தேதி முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்.. பிச்சை போடுவதன் மூலம் அந்த பாவத்தில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று இந்தூர் மக்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சொத்து எல்லாம் இருக்கு: பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்தூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. இது தொடர்பாக அந்த திட்டத்தின் அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில், "நாங்கள் இது தொடர்பாக ஆய்வு செய்த போது எங்களுக்கு சில அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்தன. சில பிச்சைக்காரர்கள் மிகப் பெரிய வீடுகளை வைத்து இருந்தனர். பல பிச்சைக்காரர்களின் குடும்பம் நல்ல நிலையிலேயே இருக்கிறது. சிலரது குழந்தைகள் வங்கியில் கூட வேலை செய்து வருகிறார்கள். ஒரு முறை பிச்சைக்காரிடம் பேச்சுக் கொடுத்த போது அவரிடம் கையில் ரூ. 29,000 இருந்தது..
மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்துச் சம்பாதித்து வருகிறார்.. இப்படிப் பல வகையில் இருக்கிறார்கள். இது தவிர இந்தூரில் பிச்சை எடுக்க ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர் குழந்தைகளுடன் இங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் ஹோட்டலில் பதுங்கி இருந்த நிலையில், அவர்களையும் கைது செய்தோம்" என்று குறிப்பிட்டார்.
ஆதரவு: பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருவதாக மத்தியப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்தூரைச் சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஒன்று அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தருவதாகக் குறிப்பிட்டனர்.
மீட்கப்படும் பிச்சைக்காரர்களுக்கு இந்த அமைப்பு ஆறு மாதங்கள் தங்குமிடத்தை இலவசமாகத் தரும். அவர்களுக்கு மாற்று வேலையைக் கூட இந்த அமைப்பு வாங்கி தரும். மக்களைப் பிச்சை எடுப்பதைக் கைவிட நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications