குஜராத்தில் 'ஷாக்..' கல்லுக்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்.. நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் கிட்னியில் உள்ள கல்லை நீக்குவதற்குப் பதிலாக கிட்னியை மருத்துவர் நீக்கியதால் நோயாளி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ 11 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதில் பெரும்பாலான சம்பவங்களில் மருத்துவமனைகள் மீது தவறு இருக்காது.
ஆனால், அதேநேரம் சில சமயங்களில் மருத்துவர் அளிக்கும் தவறான சிகிச்சை, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் ஆகியவை காரணமாக நோயாளி உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

கிட்னியில் கல்
இது போன்ற ஒரு சம்பவம் தான் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தின் கெடா மாவட்டத்தில் உள்ள வன்க்ரோலி கிராமத்தில் வசித்தவர் தேவேந்திரபாய் ரவால். கடுமையான வயிற்று மற்றும் முதுகு வலி, சிறுநீர் போவதில் சிரமம் ஆகியவற்றால் இவர் அருகிலுள்ள கேஎம்ஜி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு இவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இடது சிறுநீரகத்தில் 15 மிமீ கல் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த கல்லை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கிட்னியை எடுத்த மருத்துவர்
அப்போது ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த மருத்துவர், கிட்னியில் உள்ள கல்லுக்குப் பதிலாக இடது கிட்னியை மொத்தமாகத் தூக்கிவிட்டதாக கூலாக கூறியுள்ளார். நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவர் அவரது குடும்பத்தினரைச் சமாதானம் செய்துள்ளனர். கிட்னி நீக்கப்பட்ட பிறகு, தேவேந்திரபாய் ரவாலுக்கு மிக மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நோயாளி உயிரிழப்பு
ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாத அளவுக்குச் செல்லவே, தேவேந்திரபாய் ரவால் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் பின்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு (IKDRC) மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2012 ஜனவரி 8இல் பலியானார். ஆப்ரேசன் செய்யப்பட்ட நாளில் இருந்து (செப். 3 2011) வெறும் 4 மாதங்களில் அவர் உயிரிழந்தார்.

நஷ்டஈடு வழங்க உத்தரவு
தேவேந்திரபாய் ரவால் உயிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே முழு காரணம் என்றும் மருத்துவரின் அலட்சியமான நடவடிக்கையாலேயே அவர் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டி குஜராத் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை முழு காரணம் என்று தெரிவித்த குஜராத் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 11.23 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். மேலும் 2012 முதல் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications