2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்!
சூரத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார் என்பது வழக்கு. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு திடீரென விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த அவதுறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அப்பீல் செய்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி எம்பியாக இருந்ததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. ராகுல் காந்தி வென்ற வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி ராகுல் வென்ற வயநாடு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தை எதிர்கக்ட்சிகள் முடக்கினர். நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடியும் காட்டினர்.
இதனிடையே ராகுல் காந்தி, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அப்போது ராகுல் காந்தியின் ஜாமீனும் நீட்டிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்காக இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications