ஹரியானா: அதிருப்தி அலை பீதி.. 'அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்' பார்முலாவை கையில் எடுத்த பாஜக!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை கடுமையாக இருக்கிறது. இந்த அதிருப்தி அலையை எதிர்கொள்ளும் வகையில்தான் "'அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்" பார்முலாவை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக அறிவித்த 67 வேட்பாளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 14 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில், ஆளும் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தாலும் ஆகக் கூடுமானவரை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க அக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து வருகிறது. ஹரியானா தேர்தல் களத்தில், 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது. இந்த அதிருப்தி பேரலையை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளது பாஜக.
ஹரியானா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 67 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 27 பேர் புதுமுகங்கள் என்பதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்: பாஜகவின் இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், ஹரியானா தேர்தல் களத்தில் ஜாதிகளின் வாக்குகள குறிவைத்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், தலித்துகள், பிராமணர்கள், பஞ்சாபியர்கள், பனியாக்கள் ஆகியோருக்கு இந்த வேட்பாளர்கள் பட்டியல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஹரியானாவின் தீர்மானிக்கும் சக்திகளான ஜாட் ஜாதிக்கும் கணிசமான வாய்ப்பைத் தந்துள்ளது பாஜக. பாஜக அறிவித்த 67 வேட்பாளர்களில் 14 பேர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்ததாக தலித், ஜாட் ஜாதிகளைச் சேர்ந்த 26 (13+13) பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பிராமணர்கள் 9, பஞ்சாபிகள் 8, பனியாக்கள் 5, ராஜ்புத்-1, சீக்கியர் 1 என அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்புகளை வாரிக் கொடுத்துள்ளது பாஜக.
ஓபிசி முதல்வர்: ஹரியானாவில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் (ஓபிசி) சேர்ந்தவர். பஞ்சாபி சமூகத்தைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவி வகித்த போது ஆட்சியிலும் கட்சியிலும் கடும் அதிருப்தியை எதிர்கொண்டார். இதனால் நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். ஹரியானா மாநில பாஜா தலைவர் மோகன் லால் படோலி, பிராமணர் ஜாதியைச் சேர்ந்தவர்.
புதுமுகங்கள் 27: மேலும் அதிருப்தி அலை மாநிலம் முழுவதும் வீசுவதால் அறிவித்த 67 வேட்பாளர்களில் 27 புதுமுகங்களையும் களமிறக்கி இருக்கிறது பாஜக. சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது பாஜக மேலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஹரியானா தேர்தல் களத்தில் ஜாட், ஜாட் அல்லாத ஜாதி வாக்குகள் என பிரிந்து வெளிப்படும். இந்த முறை அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய வேட்பாளர்களை அறிவித்து ஹரியானாவை ஒரு பரிசோதனைக் களமாக்கி இருக்கிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications