சபரிமலையில் பக்தர்களை ஏமாற்றிய வியாபாரிகள்.. அதிகாரிகள் ரெய்டில் வசமாய் சிக்கிய 26 கடைகள்! ஷாக்
சபரிமலை: சபரிமலை சன்னிதானம் முதல் அப்பாச்சி மேடு வரையிலான கடை வியாபாரிகள் அய்யப்ப பக்தர்களை ஏமாற்றுவதாக வந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு செய்ததில் 26 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.

41 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்நிலையில் தான் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் இந்த ஆண்டும் சபரிமலை சீசன் என்பது களைகட்டியுள்ளது. இந்நிலையில் தான் சபரிமலை சீசனை சாதகமாக வைத்து சில வியாபாரிகளை பக்தர்களை ஏமாற்றுவதாக கேரளா உணவுத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அதாவது சபரிமலை சன்னிதானம் முதல் அப்பாச்சி மேடு வரை இயங்கும் உணவகங்கள், தேநீர் கடைகள், பழச்சாறு கடைகளில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது பல கடைகளில் விதிகள் மீறப்பட்டு இருந்தது. உணவுகளை தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தது, உணவு பொட்டலங்களில் உற்பத்தி தேதி குறிப்பிடாமல் இருந்தது, குறித்த அளவை விட எடை குறைவாக உணவு விற்பனை செய்தல் உள்பட பல விதிகளை கடைகள் பின்பற்றாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
இப்படியாக மொத்தம் 26 கடைகள் விதிகளை மீறி இயங்கி பக்தர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கடைகளுக்கு தனித்தனியே அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 26 கடைகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications