அத்வானி எதிர்த்தாலும் சரி.. நாளையே மோடியை வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு?
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங். அத்வானியின் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் நாளையே மோடி பெயரை அறிவிக்க அவர் தீர்மானித்துள்ளாக லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது.
அத்வானியை இந்த விஷயத்தில் அவரால் சமாதானப்படுத்த முடியாமல் போன நிலையில் தற்போது சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து ஒருமித்த கருத்தை விரைவாக எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மோடி விவகாரம் டெல்லியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அனைவருடனும் பேசி வருவதாகவும், விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அனைவருடனும் பேசிய பின்னர் விரைவில் முடிவு தெரிவிக்கப்படும். யாரும் எந்த மோதலிலும் இதுதொடர்பாக ஈடுபடவில்லை என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், விவாதம் நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். கட்சிக்குள் இதுதொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சுமூகமாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் அத்வானியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மோடி பெயரை நாளையே அறிவிக்க ராஜ்நாத் சிங் தீர்மானித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications