நானும் விஞ்ஞானிதான்.. நாசாவுக்கு போறேன்...! மீடியாக்களை 2 வருஷமா ஏமாற்றிய கேரள வாலிபர்!
திருவனந்தபுரம்: எனக்கு நாசாவில் வேலை கிடைச்சிடுச்சி... நானும் விஞ்ஞானிதான் என்று கேரள வாலிபர் சொன்ன பொய்யை நம்பி பக்கம் பக்கமாக பல முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து நியூஸ்மினிட் தரும் தகவல் கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் மணிமாலா பகுதியை சேர்ந்தவர் பி.வி. அருண். 2012 ஆகஸ்ட் மாதம் கேரள மீடியாக்கள் மத்தியில் இவர்தான் திடீர் ஹீரோ. காரணம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இவருக்கு வேலை கிடைத்துவிட்டதுதானாம்.
சும்மா இருப்பார்களா நேஷனல் மீடியாக்காரர்கள். அருண் வீட்டில் குவிந்து விட்டார்கள். 2012 செப்டம்பர் 19ம்தேதி தி ஹிந்து நாளிதழில் "In search of extraterrestrial life" என்ற தலைப்பில் அருண் குறித்து கட்டுரை வெளியாகியிருந்தது.

ஹிந்து உள்ளிட்ட பல ஆங்கில நாளிதழ்களும் அருணை நேர்காணல் எடுத்து அதுகுறித்த செய்தியை வெளியிட்டிருந்தன. "His dreams make a ‘contact' with ETs" என்ற தலைப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அருண் பற்றிய செய்தியை வெளியிட்டது. அதுமட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான வாய்ப்பு வந்தும், சிறு வயதில் ஆசிரியர்கள் கூறியபடி ஆராய்ச்சி மனப்பான்மைதான் அருணுக்கு விஞ்சி இருப்பதாக சான்றிதழும் அளித்தது அந்த கட்டுரை.
ஊடகங்களின் நேர்க்காணல்களில் அருண் தொடர்ந்து கூறி வந்தது ஒன்றே ஒன்றைத்தான். அதாவது, அமெரிக்காவிலுள்ள மாஸ்ஆச்சுஸ்டெஸ் இன்ஸ்ட்டடிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) என்ற நாசாவின் பயிற்சி பட்டறையில் தான் பயிற்சி எடுப்பதாகத்தான் அவர் கூறிவந்தார்.
இதனிடையே இம்மாதத்தின் முதல் வாரத்தில் டெலிகிராப் நாளிதழ் 'patriot NASA boy turns hero' என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு, அருணை பிரதமர் மோடி அழைத்து அரை மணி நேரம் சந்திப்பு நடத்தியதாகவும், இந்திய விண்வெளி ஆய்வு வாய்ப்பு கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்திருக்கும் என மோடி உறுதியளித்ததாகவும் அந்த ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.
ஆனால் வேடிக்கை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, இப்போது, வரை வெளியான செய்திகளில் துளியும் உண்மை கிடையாதாம். இந்த குட்டை கண்டுபிடித்ததும் ஒரு கேரளாக்காரர்தான். கேரள டெலிகம்யூனிகேசன் போலீஸ் எஸ்.பியாக உள்ள ஜெயந்தன் என்பவர்தான் முதலில் இதை கண்டுபிடித்துள்ளார். இவர் நெட்டிசன் குரூப் என்ற பெயரில் இணையத்தில் ஒரு குரூப்பை நடத்தி வருகிறார்.
அதில் அருண் குறித்த செய்தியை போட்டபோது, MITயில் பணியாற்றும் ஒரு மலையாளி அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். ஏனெனில் நாசாவில் வேலை பார்க்கும் மலையாளிகள் அனைவரும் தனக்கு தெரியும் என்பதால் அருண் என்ற ஒருவர் இங்கு வேலை பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்,.
இதன்பிறகு இப்போது, மீடியாக்கள் அருணை எப்படி அழைக்கின்றன தெரியுமா 'புரளி அருண்' என்று தலைப்பிட்டு அழைக்கின்றன. ஆனால் உண்மையை ஆராய்ச்சி செய்யாமல், 2 வருடமாக அந்த புரளிக்கு துணை போனதும் இதே மீடியாக்கள்தான் என்பது வேதனையே.












Click it and Unblock the Notifications