"என் அப்பாவுக்காக ராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானை பழிவாங்குவேன்”: வீரமரணம் அடைந்த வீரரின் மகள் சபதம்
டெல்லி: "என் அப்பாவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், என் அப்பாவுக்காக நான் ராணுவத்தில் சேர்ந்து பழிவாங்குவேன்." என பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுரேந்திர சிங் மோகாவின் 11 வயது மகள் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து வந்த நிலையில் நேற்று இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் சண்டை நிறுத்தம் அறிவித்து சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

ஜம்மு - காஷ்மீரில் உதம்பூரில் உள்ள இந்தியா விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் அதை முறியடித்தது. ஆனால் ட்ரோன் தாக்குதலின்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சுரேந்திர சிங் மோகா என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவை சேர்ந்த சுரேந்திர சிங் மோகா, உதம்பூர் விமானப்படை தளத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வீரமரணம் அடைந்த சுரேந்திர சிங் மோகாவின் மகள் வர்திகா தனது தந்தையின் தியாகம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
"எனது தந்தை எதிரிகளைக் கொன்று நாட்டைப் பாதுகாக்கும் போது தியாகியாக இறந்தார் என்பதில் பெருமைப்படுகிறேன்.பாகிஸ்தான் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும். எனது தந்தையைப் போலவே ஒரு ராணுவத்தில் சேர்ந்து அவரது மரணத்திற்குப் பழிவாங்குவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
#WATCH | Jhunjhunu, Rajasthan | Vartika, Daughter of Sergeant Surendra Moga, says, "I am feeling proud that my father got martyred while killing the enemies and protecting the nation... Last time, we talked to him at 9 PM last night and he said that drones are roaming but not… https://t.co/H0EI1xKw4e pic.twitter.com/0mIHuHT8iL
— ANI (@ANI) May 11, 2025
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சுரேந்திர மோகா கடைசியாக தனது மனைவி சீமா மற்றும் மகளிடம் பேசி உள்ளார். பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுற்றித் திரிகின்றன, ஆனால் இதுவரை எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்றும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுதான் அவர்களின் கடைசி உரையாடல். அதன் பிறகு நடந்த தாக்குதலின் போதுதான் அவர் இடிபாடுகளில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளார்.
சுரேந்திர மோகாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முழு ராணுவ மரியாதையுடன் அவரது கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. கிராமத்தின் தெருக்களில் 'பாரத் மாதா கீ ஜெய்' என்ற முழக்கங்கள் எதிரொலித்தன.












Click it and Unblock the Notifications