நான் எதுக்குங்க சாகனும்... ஸ்வேதாவை சீண்டியதாக புகாருக்குள்ளான எம்.பி. ஆவேசம்

நடிகை ஸ்வேதா மேனன், கொல்லத்தில்நடந்த படகுப் போட்டிக்கு வந்தபோது அவருடைய கை, தோளை உரசியதாகவும், வேண்டும் என்றே அருகே போய் ஒட்டியபடி நின்றதாகவும் 73 வயதான குருப்பு மீது புகார் கிளம்பியது. ஸ்வேதா மேனனும் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்க, போலீஸார் குருப்பு மீது வழக்கைப் போட்டனர்.
ஆனால் அந்தப் புகார்களை நிராகரித்தார் குருப்பு. தனக்கு எதிரான சதி இது என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக கூறி புகாரைத் திரும்பப் பெற்றார் ஸ்வேதா.
இந்த நிலையில் ஸ்வேதா கொடுத்த புகாரால் அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு முயன்றார் குருப்பு என்று ஒரு தகவல் பரவியது. இதை மறுத்துள்ளார் குருப்பு.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கொல்லம் அஷ்டமுடி காயலில் நடந்த படகு போட்டிக்கு நடிகர் கலாபவன் மணி, ஸ்வேதா மேனன் ஆகியோரை அழைக்க வேண்டும் என்று சிலர் விருப்பப்பட்டனர். எனவே ஸ்வேதா மேனன் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். ஏராளமான மக்கள் முன்னிலையில் விழா நடந்தது. அப்போது ஸ்வேதா மேனனிடம் நான் சில்மிஷம் செய்ததாக கூறுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இந்த புகாருக்கு பின்னணியில் கூட்டுச்சதி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் மோசமானவன் இல்லை. குடிபோதையில் வாழ்க்கையை தொலைத்த குடும்பத்தினரை சேர்த்து வைத்தவன் நான். அப்போதெல்லாம் பாராட்டாதவர்கள் இப்போது நான் நடிகையை சில்மிஷம் செய்ததாக கூறி புரளி கிளப்புகிறார்கள்.
இதை கேட்டு நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு கட்சியினரும், பத்திரிகையாளர்களும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.
எம்.பி. பதவியில் இருந்து மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கிறது. நான் சினிமா பார்ப்பதும் இல்லை. ஸ்வேதாமேனன் பற்றியும் எனக்கு தெரியாது. இந்த விழாவில் தான் அவரை பார்த்தேன்.
ஸ்வேதா மேனன் என் மீது கூறிய புகாருக்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அந்த மேடையில் வேறு யாராவது அவருக்கு தொல்லை கொடுத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மட்டுமே கூறி இருந்தேன் என்றார் குருப்பு.












Click it and Unblock the Notifications