பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.. ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!
ஸ்ரீநகர் : பாகிஸ்தானுடன் எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய போது காஷ்மீர் முன்னாள் முதல்வர்களைச் சாடினார்.
மேலும் பேசிய அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் என்றும் ஆனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.

ஜம்முவில் அமித்ஷா
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டில் இருந்து பயங்கரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒருவர் கூட இல்லை. மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம்.

பாகிஸ்தான் பற்றி
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த அப்துல்லாக்கள், முஃப்திகள் மற்றும் நேரு, காந்தி குடும்பத்தினரால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை. சிலர் பாகிஸ்தானைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சார இணைப்புகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

ஊழல்
கடந்த மூன்று ஆண்டுகளில், காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இங்கு, இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் அனைத்தும் ஊழலில் திளைத்ததால், வளர்ச்சி என்பது துளியும் இல்லாமல் இருந்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது.

அவர்கள் ஆயுதங்களை கொடுத்தார்கள்
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு - காஷ்மீருக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடுகள் வந்துள்ளன. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வந்துள்ளோம். அவர்கள் இளைஞர்களின் கைகளில் கற்களையும், துப்பாக்கிகளையும் அளித்தனர். மோடி அரசு தான், மொபைல் போன்களையும், லேப்டாப்களையும் அளித்தது.

பாகிஸ்தானுடன் பேச்சு கிடையாது
மெஹபூபா முப்தியும், பரூக் அப்துல்லாவும் தங்கள் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பது உங்களுக்கு தெரிய வரும். பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். 70 ஆண்டுகளாக காஷ்மீரை ஆண்டவர்கள் கூறுகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாரமுல்லா மக்களுடன் பேசுவோம், காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications