சனாதனிகள் மீது நாளை "இந்தியா" கூட்டணி தாக்குதல் நடத்தும்- ம.பி.யில் உதயநிதி ஸ்டாலினுக்கு மோடி பதில்!
பினா: சனாதனத்தை இன்று குறிவைத்திருக்கும் இந்தியா கூட்டணி நாளை நம் மீதான தாக்குதலை அதிகரிப்பார்கள் என மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அரசு திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று ரூ50,700 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பிரதேசத்தின் பினா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஜி 20 மாநாட்டின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி.
சனாதன தர்ம ஒழிப்பு: "இந்தியா" கூட்டணிக்கு ஒரு தலைவர் கிடையாது. இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிற மறைமுக செயல் திட்டத்தைக் கொண்டதுதான் "இந்தியா" கூட்டணி. சனாதன தர்மத்தை ஒழித்தாக வேண்டும் என தீர்மானத்துடன் இருக்கிறது "இந்தியா" கூட்டணி.
சனாதன தர்ம அழிப்பு: இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சனாதன தர்மம்தான் சுவாமி விவேகானந்தருக்கும் திலகருக்கும் உத்வேகம் தந்தது.
#WATCH | Bina, Madhya Pradesh: Prime Minister Narendra Modi says "The people of this INDIA alliance want to erase that 'Sanatana Dharma' which gave inspiration to Swami Vivekananda and Lokmanya Tilak...This INDIA alliance wants to destroy 'Sanatana Dharma'. Today they have openly… pic.twitter.com/wc0C2hBxtS
— ANI (@ANI) September 14, 2023
சனாதனிகள் மீது தாக்குதல்?: "இந்தியா" கூட்டணியானது சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகிறது. தற்போது சனாதன தர்மத்தின் மீது பகிரங்கமாகவே குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது "இந்தியா" கூட்டணி. நாளை நம் மீதான தாக்குதல்களை "இந்தியா" கூட்டணி அதிகரிக்கக் கூடும். இந்த தேசத்தை நேசிக்கக் கூடிய நாட்டில் உள்ள அத்தனை சனாதனிகளும் இத்தகையவர்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு சனாதனியும் "இந்தியா" கூட்டணிக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
உதயநிதி பேச்சுக்கு பதில்: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையைக் கூட்டி, சனாதன விவகாரத்தில் உதயநிதிக்கு பதிலடி தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தற்போது பிரதமர் மோடியே, சனாதன ஒழிப்பு சர்ச்சையில் அதுவும் அரசு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications