பாகிஸ்தானில் அணுஆயுதம் பாதுகாப்பா இருக்கா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் முக்கிய கேள்வி
ஜம்மு காஷ்மீர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்த பிறகு முதல் முறையாக இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு சென்றார். பாகிஸ்தானை எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டிய நிலையில் பாகிஸ்தானில் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உலக நாடுகளுக்கு முக்கிய மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானால் நாம் கொடுத்த பதிலடியை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் நம்மிடம் போர் நிறுத்தும்படி கேட்டதை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.

இருநாடுகள் இடையேயான போர் நிறுத்தம் கடந்த 10ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் 5 நாட்கள் கழித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று ஜம்மு காஷ்மீர் சென்றார். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நாட்டுக்காக போராடிய ராணுவ வீரர்களை ராஜ்நாத் சிங் பாராட்டினார். ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு அவர்கள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் ‛‛இன்று ஸ்ரீநகர் மண்ணில் இருந்து சொல்கிறேன். மொத்த உலகத்துக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறேன்.
முரட்டுத்தனம் கொண்ட நாட்டில் (பாகிஸ்தான்) அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?. பாகிஸ்தானின் அணுஆயுதத்தை சர்வதேச அணு எனர்ஜி ஏஜென்சி மேற்பார்வையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
அதாவது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டபோது பாகிஸ்தான் அணுஆயுதத்தை கையில் எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் பரவியது. இதனை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா மறுத்தார். மேலும் பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கிராணா மலைப்பகுதியில் சுரங்கம் தோண்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு நம் நாடு தாக்கியதாகவும், அணு கசிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இதனை நம் விமானப்படை முற்றிலுமாக மறுத்தது. சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஏர் மார்ஷல் ஏகே பாரதி விளக்கம் அளித்தார்.
ஏர் மார்ஷல் ஏகே பாரதியிடம் அவரிடம் ‛‛பாகிஸ்தான் அணுஆயுதங்களை கிராணா மலைப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதா?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛ பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கிராணா மலையில் சேமித்து வைத்திருப்பதை கூறியதற்கு நன்றி. அங்கு என்ன இருந்தாலும் கூட நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அந்த இடம் எங்களின் டார்கெட் பட்டியலில் இல்லை'' என்று மறுத்தார்.
இருப்பினும் பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழல், மோதல் போக்கு, அரசு, ராணுவம் இடையேயான தனித்தனி செயல்பாடு உள்ளிட்டவற்றால் அணுஆயுதம் பாகிஸ்தானில் இருப்பது பிரச்சனைக்குரிய ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானின் அணுஆயுதத்தை சர்வதேச அணு எனர்ஜி ஏஜென்சி கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஏஜென்சி தான் அணுஆயுதம் உள்ள நாடுகளை கண்காணித்து கூடுதல் அணுஆயுத உற்பத்தியை தடுக்கும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications