அடாவடி பாகிஸ்தானுக்கு மரண அடி- போருக்கு தயாராகும் இந்தியா? அனைத்து நாடுகளின் தூதர்களுடன் ஆலோசனை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உக்கிரமான நடவடிக்கைகளை நமது நாடு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் இத்தகைய தாக்குதல்களுக்கு இறுதி முடிவு கட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் வாழ்வாதரமான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது; இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது; பாகிஸ்தானுடனான வாகா- அட்டாரி எல்லைகளை மூடுவது என்கிற அதிரடியான அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இந்த அதிரடியை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இன்று, சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இருநாடுகளிடையேயான போர் பதற்றத்தை தணிக்கும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது, பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிப்பது; இந்தியர்கள் வெளியேற கெடுவிதிப்பது என்கிற நடவடிக்கைகளை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த தன்னிச்சையான போக்காது, இந்தியாவுடன் வலிய யுத்தத்துக்கு வருவதாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்க முடியும் என்பதிலும் நமது மத்திய அரசு உறுதியாக் இருக்கிறது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான உக்கிரமான ராணுவ நடவடிக்கையை நமது நாடு எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம் என்பதாகவே டெல்லி நடவடிக்கைகள் அமைந்துள்ளது. டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து விவரித்தார். இதனையடுத்து ராணுவ தளபதி, ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியுள்ளது. இதேபோல அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் மத்திய அரசு நடத்தியது. ஜி20 நாடுகளின் தூதர்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகளின் பேராதரவு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
ஜம்மு காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவை தருவோம் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications