2036 ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த முயற்சி.. அது நடந்தால் பெரிய மாற்றங்கள் வரும்.. பிரதமர் மோடி!
டேராடூன்: 2036ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டால், நம் நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் என்று கூறிய அவர், ஒலிம்பிக் தொடர் மூலமாக நாட்டின் சுற்றுலாவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக 100க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. அதேபோல் பல்வேறு போட்டிகளில் நூலிழையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை தவறவிட்டனர். இருந்தாலும், இந்தியாவுக்கு சிறந்த ஒலிம்பிக் தொடராக இது அமைந்தது.

அப்போது 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை இந்தியா நடத்த முயற்சிகள் எடுக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர் நீடா அம்பானி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்த இந்தியா தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்வம் காட்டி இருக்கிறார்.
உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நாட்டின் 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடத்தப்பட்டாலும், அங்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படும். அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளும் அதிகரிக்கும்.
ஒலிம்பிக் என்பது வெறும் ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல. ஏனென்றால் ஒலிம்பிக் மூலமாக கட்டுமான துறை, புதிய தொடர்புகள், போக்குவரத்து, குறிப்பாக சுற்றுலா துறை என்று பல்வேறு துறைகளும் முன்னேற்றம் அடையும். உலகம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் வருவார்கள். இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்களின் முயற்சியாகும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்கும் மிக முக்கியமானது. அண்மையில் இந்தியாவின் கோகோ அணி தங்கம் வென்றது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் வென்று சாம்பியனாகினார். இந்தியாவில் விளையாட்டு என்பது வெறும் கூடுதல் திறமையாக மட்டும் இல்லை. தற்போது இளைஞர்கள் விளையாட்டினை தங்களின் எதிர்காலமாக முடிவு செய்ட்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications