இதுதான் இந்தியா! தாக்குதல் நடத்த வந்த பாக். தீவிரவாதி.. ரத்தம் கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்!
ஜம்மு: இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் தீவிரவாதியை ரத்தம் கொடுத்து நமது இந்திய ராணுவ வீரர்கள் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் கடந்த 22-ம் தேதி இரவு ஆட்கள் நடமாட்டம் இருப்பதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அப்போது எல்லையில் வைக்கப்பட்டிருந்த வேலியை வெட்டி உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரண்டு தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், ஒரு தீவிரவாதி மட்டும் குண்டுக் காயங்களுடன் பிடிபட்டார். அதன் பின்னர் அந்த தீவிரவாதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மயக்கம் தெளிந்த அவரிடம் ராணுவ வீரர்கள் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் பாகிஸ்தானில் உள்ள கோட்லி மாவட்டத்தைச் சேர்ந்த டபாரக் உசேன் (32) என்பதும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனக்கு பயிற்சி அளித்து, இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பி வைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதலை மேற்கொள்வதற்காக 3 தீவிரவாதிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் கொடுத்தாகவும் டபாரக் உசேன் வாக்குமூலம் அளித்தார்.
அதன் பின்னர் மீண்டும் அவர் மயக்கம் அடைந்தார். பரிசோதனையில், 2 இடங்களில் குண்டு பாய்ந்துள்ளதால் அதிக அளவிலான ரத்தம் அவரது உடலில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்தது. இதே நிலை நீடித்தால் அவர் உயிரிழந்துவிடுவார் என்ற சூழல் எழுந்துள்ளது. அப்போது சற்றும் தயங்காத இந்திய ராணுவ வீரர்கள், உடனடியாக தங்கள் ரத்தத்தை கொடுக்க முன்வந்தனர்.
இதையடுத்து, தீவிரவாதி டபாரக் உசேனின் ரத்த வகையைச் சேர்ந்த ராணுவ வீரர்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு அவருக்கு ஏற்றப்பட்டது. இதனால் டபாரக் உசேனின் உடல்நிலை ஓரளவுக்கு சீராகியுள்ளதாக ராணுவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அவர் சிறிது காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வந்தவர் என்ற போதிலும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காக ரத்தம் கொடுத்த இந்திய ராணுவ வீரர்களின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications