அனுமன் வேஷம்.. சீதையை தேடுவது போல ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன கைதிகள்.. ஸ்டன் ஆன போலீஸ்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் சேர்ந்து ராமாயணம் நாடகம் போட்டுள்ளனர். அப்போது நாடகத்தில் அனுமன் சேனா குரங்குகளைப் போல வேஷம் போட்டிருந்த இருவர், சீதையைத் தேடுவது போலச் சிறையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் இப்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுக்க விழாக்கோலம் கொண்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இதை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் சிறைகளிலும் கூட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதில் அவர்கள் நாடகம், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள். அப்படி தான் உத்தரகாண்டில் உள்ள சிறையில் ராமாயணம் நாடகம் போட்டுள்ளனர். அப்போது நாடகத்தைச் சாக்காக வைத்தே கைதிகள் இருவர் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன நடந்தது: அதாவது உத்தரகண்ட்டில் உள்ள ஹரித்வார் சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் இணைந்து ஆண்டுதோறும் ராம்லீலா நாடகம் போடுவார்கள். அதன்படி இந்தாண்டும் ராம்லீலா நாடகம் நடத்தியுள்ளனர். அதில் ஒரு பகுதியில் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை அனுமன் தனது படைகளுடன் சென்று தேடுவது போல இருக்கும்.

அதேபோல அனுமன் படையில் உள்ள ஒரு குரங்கு போல வேடமிட்ட சிலர் சீதையைத் தேடுவது போல நடித்துள்ளனர். அப்போது தான் குரங்கு கேட் அப் போட்டு இருந்த இருவர் சீதையைத் தேடுவது போல நடித்துக் கொண்டு அப்படியே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். இப்போது தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் அவர்கள்: இப்படி சிறையில் இருந்து எஸ்கேப் ஆன கைதிகள் பங்கஜ் மற்றும் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சேனா குரங்குகள் போல் உடை அணிந்து சிறையில் இருந்து தப்பியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி நடந்தது: நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் ராம்லீலா சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹரித்வார் சிறையில் பல ஆண்டுகளாகவே சிறை கைதிகள் இணைந்து ராம்லீலா நாடகத்தை நடத்துவது பாரம்பரியம் இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட கைதிகள் தான் இப்போது தப்பிச் சென்றுள்ளனர்.

ராமாயணத்தில் ஹனுமான் தலைமையிலான வானரப் படை சீதாவைத் தேடும் காட்சியை அவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். சரியாக இந்த காட்சியின் போது தான் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். பார்வையாளர்கள் அனைவரும் நாடகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தனர். குறிப்பாக ராமர் வேடம் போட்டவர் மீது பார்வை இருந்த நிலையில், இருவரும் தப்பியுள்ளனர்.
இரும்பு கம்பிகள் + 20 அடி சிறை சுவர்.. வெறும் போர்வை தான்.. மின்னலாக தப்பி அதிர வைத்த கைதிகள்
ஏணி: மேலும், அந்த காட்சியே குரங்கு படை அங்கும் இங்கும் சென்று தேடுவது போலத் தான் இருக்கும். எனவே, இவர்கள் சீதையைத் தேடுவது போல நடிக்கிறார்கள் என்றே பலரும் நினைத்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தித் தப்பியோடியுள்ளனர். நாடகம் நடந்த சிறையில் சில கட்டுமானங்கள் நடந்து வருகிறது. எனவே, அதற்குப் போடப்பட்ட ஏணியில் ஏறி அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
விசாரணை: தப்பியோடிய இருவரும் கடுமையான குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள். தப்பியோடிய பங்கஜ் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரூர்க்கியைச் சேர்ந்தவர். அவர் வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். மற்றொரு கைதி உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த ராஜ்குமார். இவர் கடத்தல் புகாரில் விசாரணை கைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய இருவரையும் தேடும் பணிகளில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும், சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்தும் இவர்களுக்கு வெளியே யாராவது உதவினார்களா என்பது குறித்தும் அதிகாரிகள் இப்போது விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications