ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி தெலுங்கானாவை உருவாக்குகிறது மத்திய அரசு?
ஹைதராபாத்: லோக்சபாவில் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிவிட்டது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து சீமாந்திராவில் போர்க்குரல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடுமையான அமளிக்கு நடுவே தெலுங்கானா தனி மாநில மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் நாளை தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யத் தொடங்கிவிட்டனர். முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாளை ராஜினாமா

ஆனால் நாளை காலை 10 மணிக்கு அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபை கலைப்பு?
மேலும் தாம் ராஜினாமா செய்வதுடன் சட்டசபையை கலைக்கவும் அவர் பரிந்துரைக்க போவதாகவும் கூறப்படுகிறது.
தீவிரம் காட்டும் மத்திய அரசு
மத்திய அரசைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தெலுங்கானாவை எப்பாடுபட்டாவது உருவாக்கிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் சீமாந்திரா எம்.பிக்களை லோக்சபாவில் சஸ்பென்ட் செய்து உச்சகட்டமாக நேரடி ஒளிபரப்பை ரத்து செய்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு.
நாளை ராஜ்யசபாவில்..
நாளை ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுகிறது மத்திய அரசு. இதன் பின்னர் ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைக்கும் மத்திய அரசு.
ஜனாதிபதி ஆட்சி மூலம்..
தற்போதைய நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் நிச்சயமாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலமாக தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்திவிடலாம் என கருதுகிறது மத்திய அரசு. இதற்கு ஏதுவாகவே நாளை கிரண்குமார் மூலம் சட்டசபை கலைப்புக்கும் பரிந்துரை செய்ய காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜனாதிபதி ஆட்சி நடைமுறையில் இருக்கும் போதே 2 மாநிலங்களையும் உருவாக்கிவிடுவது என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.












Click it and Unblock the Notifications