ஆமீர் கானை கணவர் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்
ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் சகிப்பின்மை பற்றி நடிகர் ஆமீர் கான் பேசியதை கணவர் கிண்டல் செய்ததால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உகாரி பகுதியைச் சேர்ந்தவர் சோனம் பாண்டே. அவரது கணவர் மாயங்க். நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தது பற்றி நாளிதழில் வந்த செய்தியை சோனமும், அவரது கணவரும் புதன்கிழமை பார்த்துள்ளனர்.

செய்தியை வாசித்த மாயங்க் ஆமீர் கானை கிண்டல் செய்துள்ளார். மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக நினைக்கும் ஆமீர் எல்லாம் என்ன ஆம்பள என்று மாயங்க் தெரிவித்தது சோனத்தை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட சோனம் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மாயங்க் அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சோனம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சோனம் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.
இந்த சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications