ஆந்திராவில் 3ம் இடத்திற்கு தள்ளப்படும் ஜெகன் மோகன் கட்சி.. ஓவர்டேக் செய்த பவன் கல்யாண் கட்சி
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது மட்டுமின்றி.. அங்கு அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த இந்த லோக்சபா தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.

அப்படி சட்டசபைத் தேர்தல் நடந்த மாநிலங்களில் முக்கியமானது நமது அண்டை மாநிலமான ஆந்திரா.. அங்கு மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரே கட்டமாகக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் சட்டசபைத் தேர்தல் ஒன்றாக நடத்தப்பட்டன.
சந்திரபாபு நாயுடுவுக்கு பெரிய வெற்றி: அதில் பதிவாகும் வாக்குகள் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆந்திராவில் தொடக்கம் முதலே சந்திரபாபு நாயுடு கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. அவர் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வென்றுள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 131இல் சந்திரபாபு நாயுடு கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆட்சியைப் பிடிக்க 88 இடங்களில் வென்றால் போதும் என்ற சூழலே நிலவுவதால் சந்திரபாபு நாயுடு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறார். இதன் மூலம் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.
ஜெகனுக்கு படுதோல்வி: அதேநேரம் இந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மிக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 151 சீட்களில் வென்றிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இந்த முறை வெறும் 17 சீட்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸின் பல முக்கிய தலைவர்களும் தோல்வியைச் சந்திக்கிறார்கள்.
இதில் விஷயம் என்னவென்றால் சந்திரபாபு நாயுடு உடன் பவன் கல்யாண் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், ஒய்எஸ்ஆர் வெறும் 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் ஆளும் கட்சியாக இருந்த ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரே தேர்தலில் மாநிலத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
காரணங்கள்: சந்திரபாபு நாயுடுவை கடந்தாண்டு இறுதியில் கைது செய்ததே ஆந்திர மக்கள் ஜெகனுக்கு எதிராகத் திரும்பக் காரணமாக இருந்துள்ளது. ஊழல் புகாரில் கைதான சந்திரபாபு நாயுடு சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகே ஜாமீனில் வெளியே வந்தார். இது ஆந்திர மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது இடம்: இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வும் சிறப்பாக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண், பாஜக எனப் பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வந்தார். இந்த இரண்டும் சேர்ந்து தான் ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்குப் படுதோல்வியை மட்டுமின்றி மூன்றாவது இடத்தை பரிசாகக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications