ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்கிறார் ஓபிஎஸ்... எப்போது நடக்கும்?
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் வாடிவாசல் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளனர்.
மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அப்போது வறட்சி நிவாரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், அவசர சட்டம் நிறைவேற்றுவது குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதனை கேட்டுக்கொண்ட மோடி, வறட்சி நிவாரணத்திற்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றார். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை பாராட்டிய அவர், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுவதாக கூறிவிட்டார்.

ஓ. பன்னீர் செல்வம்
பிரதமர் உடனான சந்திப்பு குறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 50 சதவிகிதம் வறட்சி நிலவுவதாக கூறியதாக தெரிவித்தார். 32 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மோடி ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு சட்ட திருத்தம் தேவை என மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை எனவும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினேன். தமிழகத்தின் உணர்வுகளை மதிப்பதாக மோடி கூறினார். தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக அறிவேன் என்றும் மோடி தெரிவித்தார்.

நல்லதே நடக்கும்
உச்சநீதிமன்ற தீர்ப்பு தராத நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மோடிஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் நல்லது நடக்கும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை காண்பீர்கள். நடப்பவை நல்லவையாக அமையும் , பொறுமையாக இருங்கள் என சூசகமாக குறிப்பிட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

எப்போது நடக்கும்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பிரதமர் மோடியும் தெளிவாக எதையும் கூறவில்லை. அதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தெளிவாக எதையும் கூறவில்லை என்பதுதான் உண்மை.

சின்னம்மா புராணம்
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கச் சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வறட்சி நிவாரணம் கேட்டு வந்ததோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகம் சின்னம்மா புராணம் பாடினார். கடைசி வரைக்கும் ஜல்லிக்கட்டு எப்போது நடக்கும் என்று சொல்லவேயில்லை என்பதுதான் வேதனை. ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications