ஜல்லிக்கட்டு: பீட்டா மிரட்டலை எதிர்கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த தமிழக அரசு
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏதாவது வழக்கு தொடரப்பட்டால் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசை விசாரிக்காமல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதி்மன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்ற கோரிக்கைகளுடன், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தமிழ் ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்தது சட்ட விரோதம் என்றும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்படும் என்றும் அறிவித்தது. இந்த மிரட்டலை மத்திய அரசு சட்ட ரீதியாக சந்திக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த பரபரப்புக்கு நடுவே தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில், இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும், தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அந்த மனுவில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பீட்டாவின் சட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தமிழக அரசு இந்த மனுவை அவசரமாக இன்றே தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications