காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓவர்! ஆனா 5 இடங்களில் 2 கட்சிகளும் போட்டி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் போட்டியிடும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே இப்போது தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. முதலாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு இப்போது நிறைவடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என்று மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் களத்தில் உள்ளனர்.
தொகுதிப் பங்கீடு: காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் டெல்லியில் இருந்து ஜம்மு விரைந்தனர். முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே இன்று மாலை தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை இடங்கள் இருக்கும் நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி அதில் 51 சீட்களில் போட்டியிடும். மேலும், காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎம் மற்றும் பாந்தர்ஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டி: தொகுதிப் பங்கீட்டுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "தேசிய மாநாடு 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடும். 5 இடங்களில் நட்பு ரீதியான அதேநேரம் ஒழுக்கமான போட்டி இருக்கும். இந்த 88 இடங்கள் போக சிபிஎம்க்கு 1 இடத்தையும், பாந்தர்ஸ் கட்சிக்காக 1 இடத்தையும் ஒதுக்கி உள்ளோம்" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தேர்தல் நடக்கிறது. காஷ்மீரில் கடைசியாக 2014ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடந்தது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், 2019இல் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது அங்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
இந்தியா கூட்டணி வெல்லும்: தொகுதிப் பங்கீடு அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீரில் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக நாங்கள் இணைந்து போராடுவோம். நாட்டைப் பிரித்து உடைக்கவும் மதவாதத்தைத் தூண்டும் சக்திகளை எதிர்த்தும் போராடவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது" என்று கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications