"இதை" மட்டும் செய்தால்.. காங்கிரஸ் கூட்டணியே அத்தனை தொகுதிகளிலும் போட்டியிடலாம்- மெகபூபா அதிரடி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தங்களது மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயல் திட்டத்தை ஏற்பதாக காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அறிவித்தால் அத்தனை தொகுதிகளையும் அந்த கூட்டணிக்கே ஒதுக்க தயார் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அதிரடியாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மெகபூபா முப்தி இந்த நிபந்தனையை விதித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஶ்ரீநகர் பயணத்தின் போது தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவரான முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் மெகபூபா முப்தி கூறியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் தொகுதிகளைப் பங்கீடு செய்வதற்கான கூட்டணியை மட்டும் அமைத்துள்ளன. எந்த ஒரு பொது செயல் திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு அந்த கூட்டணி அமையவில்லை.
மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான செயல் திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இந்த செயல் திட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஏற்றுக் கொண்டால், அந்த கூட்டணிக்கே அனைத்து தொகுதிகளையும் விட்டுக் கொடுத்து தேர்தலில் ஆதரவும் தர தயாராக இருக்கிறோம்.
2014-ம் ஆண்டு பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த போதும் எங்கள் கட்சியின் செயல் திட்டத்தை அந்த கட்சி ஏற்றுக் கொண்டது. அதனையேதான் தற்போது காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் நாங்கள் நிபந்தனையாக வைக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை தற்போதைய தேர்தலை தொகுதிகள் பங்கீட்டுக்கானதாகப் பார்க்கவில்லை. ஜம்மு காஷ்மீரின் கண்ணியத்தை மீட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை தாண்டியும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. ஆகையால்தான் எங்கள் செயல் திட்டத்தை நாங்கள் முன்வைத்து வலியுறுத்துகிறோம். இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.
பாகிஸ்தானுடன் வர்த்தகம்: மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தக உறவு தொடங்கப்பட வேண்டும்; இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பழமையான சாரதா பீடம் கோவில் முழுமையான வழிபாட்டுத்தலமாக மாற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதேபோல தேசிய மாநாட்டுக் கட்சியும் இலவச மின்சாரம், இலவச சிலிண்டர்கள் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications