ஜம்மு காஷ்மீர் வேட்பாளர் விவகாரம்: 3-வது நாளாக போர்க்களமான பாஜக அலுவலகம்! தப்பி ஓடிய மாநில தலைவர்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு விவகாரம் மிகப் பெரும் குடைச்சலாக உருவெடுத்துள்ளது. ஜம்முவில் பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் இன்று 3-வது நாளாகப் போராட்டம் நடத்தினர். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா கட்சி அலுவலகத்தை விட்டு திடீரென தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரையில் வேட்பாளர்களை அறிவித்தது முதலே பெரும் குழப்பம்தான். முதலில் 44 வேட்பாளர்களை அறிவித்த பாஜக பின்னர் அதனை வாபஸ் பெற்றது. இதனையடுத்து திடீரென 15 வேட்பாளர்களை அறிவித்தது. 2வது பட்டியலாக 1 வேட்பாளரை அறிவித்தது. 3-வதாக மேலும் 26 வேட்பாளர்களை அறிவித்தது.
இந்த வேட்பாளர் பட்டியலில் சீட் மறுக்கப்பட்ட பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஜம்முவில் மாநில பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக அறிவித்த 42 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண்ணுக்குதான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால் கொந்தளித்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நேற்று ஜம்முவில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இன்றும் ஜம்முவில் பாஜக தலைமை அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பாஜக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டம் நடந்தது. ஸ்ரீமாதோ வைஷ்ணவ் தேவி தொகுதி வேட்பாளராக தம்மைதான் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்தவர் ரோஹித் துபே. அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் இன்று பாஜக தலைமை அலுவலகத்தை தமது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு பலத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது ஜம்மு காஷ்மீர் பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரைனா, அதிருப்தியாளர்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவரை பேசவே விடாமல் ரோஹித் துபே ஆதரவாளர்கள் கெரோ செய்தனர். இதனால் நிலைமை விபரீதமாகும் என உணர்ந்த ரவீந்தர் ரைனா, கட்சி தலைமை அலுவலகத்தை விட்டே தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications