ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம்: பயத்தில் பெங்களூர் வாழ் தமிழர்கள்
பெங்களூர்: ஜெயலலிதா சிறையிலுள்ள நிலையில், வருத்தம் தெரிவித்து பெங்களூர் வாழ் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா சிறையிலுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போயுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பெங்களூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் வந்து குவிந்துள்ள அதிமுகவினர் அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று பெங்களூரின் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும், அதிமுகவினர் கருப்பு துணிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ள மெஜஸ்டிக் அருகேயுள்ள ஸ்ரீராமபுரத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளி தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களில் சுமார் ஐம்பது பேர் இன்று தர்ணா நடத்தினர்.
ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடப்பதால், கர்நாடகத்துக்காரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து தமிழகத்துக்கு எதிராக சதி செய்வதாக வேகமாக ஒரு வதந்தி பரப்பிவிடப்படுகிறது.
இதற்கு எதிராக கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெங்களூர் வாழ் தமிழர்கள் உள்ளனர்.
இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையிலானதும் அல்ல, இரு மாநில மக்களுக்கு இடையிலானதும் அல்ல என்பதையும், இது ஒரு சட்ட விவகாரம் என்பதையும் அனைத்து தரப்பினரும் உணர வேண்டியது மிக மிக முக்கியம்.












Click it and Unblock the Notifications