Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவானிசிங் நியமனம், ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணை செல்லாது: நீதிபதி மதன் லோகூர் அதிரடி தீர்ப்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதும் செல்லாது; அவர் ஆஜராகி வாதாடிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையுமே செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மதன் லோகூர் அதிரடியாக நேற்று தீர்ப்பளித்தார். மேலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிரிமினல் வழக்கு நடைபெற்றிருப்பது என்பது மிகவும் தவறான முன்னுதாரணம்; பவானிசிங் ஆஜரானதன் மூலம் கிரிமினல் வழக்குகளின் நீதி வழங்கும் முறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நீதிபதி லோகூர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

அன்பழகன் மனு

அன்பழகன் மனு

இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங், ஆஜராவதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு கடந்த பிப்ரவரி 5-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அன்பழகன் மேல்முறையீடு செய்தார். பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தம்மை ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரியும் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதில் அளிக்கும்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட பெஞ்ச்சில் நடைபெற்று வந்தது.

இறுதித் தீர்ப்பு

இறுதித் தீர்ப்பு

அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அந்தியார்ஜூனா, விகாஸ் சிங் ஆகியோரும் கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.வி.ராவ், ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வக்கீல் துளசி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

கடந்த 7-ந் தேதியன்று இந்த மனுக்களின் மீதான இறுதி வாதங்கள் முடிவடைந்தன. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் தனித்தனியாக மாறுபட்ட 136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி மதன் லோகூரின் தீர்ப்பு

நீதிபதி மதன் லோகூரின் தீர்ப்பு

நீதிபதி மதன் பி.லோகூர் தமது தீர்ப்பில் கூறியதாவது:

  • அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக ஊழல் தடுப்பு பிரிவு நியமனம் செய்தது சட்டப்படி செல்லாது.
  • மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற மனுதாரர் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
  • மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சரியான முறையில் நடக்கவில்லை. அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தமிழக அரசு மிகவும் அவசரமாக நியமித்து உள்ளது.
மிகவும் தவறான முன்னுதாரணம்

மிகவும் தவறான முன்னுதாரணம்

  • அதாவது கர்நாடக தனிநீதிமன்றம் செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பை அறிவித்தது. உடனடியாக 29-ந் தேதியன்று அவசர அவசரமாக அரசு வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் வாதாட பவானி சிங்கை தமிழக அரசு நியமித்து உள்ளது. இது சட்டவிதிமுறைகளுக்கு எதிரானது.
  • ஆட்சி அதிகாரத்தின் தலையீடு போன்ற காரணங்களால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு கிரிமினல் வழக்கு நடைபெற்றது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். இந்த தாமதம் மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று.
மேல்முறையீட்டு விசாரணையே செல்லாது

மேல்முறையீட்டு விசாரணையே செல்லாது

  • பவானி சிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர்ந்தன் மூலம் கிரிமினல் வழக்குகளின் நீதி வழங்கும் முறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் தீவிரமான நடவடிக்கை தேவை.
  • கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோல்வியடைந்து உள்ளதால் இதை சீர்படுத்த ஏதாவது செய்யவேண்டும்.
  • இந்த வழக்கில் நீதி விசாரணை நடைபெற்ற விதம் மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. எனவே அன்பழகன் தரப்பு மனுவை ஏற்றுக் கொண்டு மேல்முறையீட்டில் பவானிசிங் நியமனம் செல்லாது என்று உத்தரவிடுகிறேன்.
  • இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முறையான அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் நடைபெற்ற காரணத்தால் இந்த விசாரணை செல்லாது. இது மீண்டும் நடைபெறவேண்டும்.
நீதிபதி பானுமதி தீர்ப்பு

நீதிபதி பானுமதி தீர்ப்பு

நீதிபதி பானுமதி தமது தீர்ப்பில் கூறியதாவது:

  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது பணி முடிந்ததைக் கர்நாடக அரசு உறுதிப்படுத்தவில்லை.
  • கீழ்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதாடிய பவானி சிங் மேல்முறையீட்டுக்காக உயர்நீதிமன்றத்திலும் வாதாடியதில் தவறு ஏதும் இல்லை.
  • அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது குறிப்பிட்ட நீதிமன்றத்துக்காக அல்ல. குறிப்பிட்ட வழக்குக்காக நியமிக்கப்படலாம்.
பவானிக்கு அதிகாரம் உண்டு

பவானிக்கு அதிகாரம் உண்டு

  • இந்த வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை கர்நாடக அரசு பவானிசிங்கின் நியமனத்தை ரத்து செய்யாத காரணத்தால் வேறு உத்தரவு இல்லாமல் இந்த வழக்கில் ஆஜரானதற்கு அவருக்கு உரிமை உள்ளது.
  • கர்நாடகா அரசு வழக்கறிஞராக, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான அனைத்து அதிகாரமும் பவானி சிங்கிற்கு உள்ளது.
  • இதனால் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்.
கூடுதல் பெஞ்ச் நீதிபதிக்கு பரிந்துரை

கூடுதல் பெஞ்ச் நீதிபதிக்கு பரிந்துரை

மேலும் மேல்முறையீட்டு மனுவில் தம்மையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அன்பழகனின் மனு 2 நீதிபதிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் அன்பழகன் மனு தொடர்பாக பின்னர் இரு நீதிபதிகளும் இணைந்து பிறப்பித்த உத்தரவில், இந்த மனுவை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரை செய்கிறோம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு முன்வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம் என்று குறிப்பிட்டனர். எனவே அன்பழகன் இந்த மனு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து உத்தரவிடுவார்.

நீதிபதி கையில்தான் முடிவு

நீதிபதி கையில்தான் முடிவு

நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் பானுமதி தீர்ப்பு வழங்கி முடித்ததும் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் அந்தியார்ஜூனா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்கு இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதி குமாரசாமியே முடிவெடுப்பார் என்று அறிவித்தனர்.

நீதிபதி குமாரசாமி கடிதம்

நீதிபதி குமாரசாமி கடிதம்

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளியான நிலையில்தான், ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் தீர்ப்பு வழங்க ஏப்ரல் 30-ந் தேதி அவகாசம் தேவை என தலைமை நீதிபதி தத்துவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனால் ஜெயலலிதா வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+