ஹேமந்த் சோரன் வீட்டின் முன் ராணுவம் குவிப்பு .. அமலாக்கத்துறை விசாரணை.. பதற்றத்தில் ஜார்க்கண்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டு முன்பு ராணுவப்படை குவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ச்சியாக சம்மன்களை அனுப்பியிருந்தது. இதில், கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி 7வது முறையாக அனுப்பப்பட்ட சம்மன்தான் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.
அதாவது, “இதுவரை நாங்கள் அனுப்பிய சம்மனுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. எனவே தங்களுக்கு தோதான நேரத்தையும், இடத்தையும் சொல்லுங்கள் அங்கு விசாரணை வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தது. இதற்கு பதிலளித்திருந்த சோரன், “ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதி இது. ஏற்கெனவே எனது சொத்து விவரங்களை நான் தாக்கல் செய்திருக்கிறேன்” என்று அமலாக்கத்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், சோரானுக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். நெருக்கமானவர்கள் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
எனவே சோரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவானது. மறுபுறம் ஆட்சியை காப்பாற்ற தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கவும் அவர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்தான் இன்று சோரனின் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு வெளியில் ஏராளமான அளவில் ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களின் தேர்தல் பரப்புரையை தடுக்கவே, அமலாக்கத்துறை களத்தில் இறக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications